கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை தொடர்பில் விசேட கலந்துரையாடல்
கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள தற்போதைய அனர்த்த நிலைமை தொடர்பில் ஆராய்வதற்கென மாகாண ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல் இன்று (27) ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
கடந்த 23ந் திகதி முதல் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற கால நிலையினால் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் மற்றும் பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள், அதற்கு எடுக்கப்படவேண்டிய அவசர நடவடிக்கைகள் தொடர்பில் இவ் அவசர கலந்துரையாடலில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனர்த்த நிலைமை
இக் கலந்துரையாடலில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர், மாகாண வீதிப்போக்குவரத்து அமைச்சின் செயலாளர், மாவட்ட சிரேஸ்ட காவல் அத்தியட்சகர், கிழக்கு பிராந்திய கடற்படை கட்டளை அதிகாரி. சுகாதாரத்திணைக்கள மாகாணப் பணிப்பாளர், மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தற்போதைய காலநிலை மற்றும் அதன் எதிர்கால தாக்கம் குறித்து இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.
குறிப்பாக உயர்தரப் பரீட்சைக்கு முகம்கொடுக்கும் கிழக்கு மாகாண மாணவர்களது நிலை குறித்தும், தற்போதுள்ள நீர்ப்பாசன குளங்களின் அபாய நிலை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள், அவசர நிலைமைக்கு சுகாதாரத் துறையின் தயார்நிலை, பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
பொதுமக்களது நிலை
இதன் போது கருத்து வெளியிட்ட கிழக்கு ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர, ஃபெங்கால் சூறாவளியின் எதிர்கால தாக்கம் மற்றும் ஆபத்து எதிர்கொள்ளும் பொதுமக்களது நிலை மற்றும் அதற்கான அரச தரப்பினூடான வசதிகளை வழங்குதல் மற்றும் பேரழிவு காரணமாக முகாம்களில் உள்ள மக்களுக்கு தேவையான வசதிகள் குறித்த ஏற்பாடு தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
மேலும் அனர்த்த நிலைமைகள் தொடர்பாக பலதரப்பட்டோர் தமது தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காக தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர் அது தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் இதன்போது கேட்டுக்கொண்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |