யாழ். தீவக பாடசாலைகள் நீக்கம்..! வெடிக்கும் மற்றொரு சர்ச்சை
நெடுந்தீவிலுள்ள (Neduntheevu) 8 பாடசாலைகளில் 6 பாடசாலைகளும் அனலைதீவில் 3 பாடசாலைகளும் எழுவைதீவில் ஒரு பாடசாலையும் அதிகஷ்ட பிரதேசத்திலிருந்து நீக்கப்பட உள்ளன என்று வடக்கு ஆளுநர் நா. வேதநாயகனிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்தப் பாடசாலைகளின் அதிபர்களாலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டது.
ஏற்கனவே இந்தப் பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் வருவதற்கு பின்னடிக்கும் நிலைமை காணப்படுகிறது.
ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு
அதிகஷ்ட பிரதேசத்திலிருந்து இந்தப் பாடசாலைகள் நீக்கப்பட்டு அதற்கான கொடுப்பனவு ஆசிரியர்களுக்கு கிடைக்காமல் போனால் நிலைமை இன்னமும் மோசமாகும் என்றும் இதன்போது தெரியப்படுத்தப்பட்டது.
மத்திய கல்வி அமைச்சாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று நேற்றைய தினம் ஆளுநரை சந்தித்த போது குறித்த பாடசாலைகளின் அதிபர்கள் வெளிப்படுத்தினர்.
ஆசிரியர் இடமாற்ற கொள்கை
இதேவேளை, வட மாகாணத்தில் ஆசிரியர் இடமாற்ற கொள்கையை சரியான முறையில் நடைமுறைப்படுத்துமாறும் தற்போது உள்ள ஆசிரியர் இடமாற்றத்தில் அரசியல் பாகுபாடு மற்றும் பழிவாங்கல் காணப்படுவதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
தற்போதுள்ள அரசாங்கத்தின் கீழ் சில அதிகாரிகள் அவர்களின் சுயலாபத்துக்காகவும் அரசாங்கத்தினுடைய ஆசிரியர் தொழிற்சங்கத்தின் நன்கிழுக்காகவும் செயற்பட்டு கொண்டு உள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக கஷ்டப் பிரதேசம் அதி கஷ்டபிரதேசங்களில் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கான இடமாற்றங்கள் சரியான முறையில் வகுக்கப்படவில்லை எனவும் குறித்த இடமாற்றங்களில் பல குறைபாடுகள் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
