கண்டி சம்பவத்திற்கு சுகாதார அதிகாரிகளே காரணம் - அமைச்சர் கெஹலிய விளக்கம்
கண்டி மாவட்டத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்ட மக்களிடம் ஒரு தடவை மாத்திரமேனும் தடுப்பூசி போட்டுக் கொண்டால் போதும் என கையெழுத்துப் பெற்றமை தொடர்பில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல விளக்கமளித்துள்ளார்.
இதன்படி சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமையவே அவ்வாறு கையொப்பம் பெறப்பட்டதாகவும் இதில் அரசாங்கத்தினதோ அல்லது அரசியல்வாதிகளினதோ தலையீடு இருக்கவில்லை எனவும் அமைச்சர் கூறினார்.
நாட்டில் உள்ள நிலைக்கு அமைய ஸ்புட்னிக் தடுப்பூசி ஒரு தடைவை போட்டால் போதும் என சுகாதார தரப்பினர் உள்ளிட்ட நிபுணர் குழு முடிவு செய்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். எனினும் ஸ்புட்னிக் தடுப்பூசி ஒரு தடவை ஏற்றிக் கொண்டால் போதும் என்பது தொடர்பான விடயங்கள் எதுவும் தமக்கு கிடைக்கவில்லை என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று ஸ்புட்னிக் தடுப்பூசி பெற்றுக் கொண்ட மக்களிடம் ஒரு தடவையேனும் தடுப்பூசி போட்டால் போதும் என கையெழுத்துப் பெறப்பட்டதால் நாட்டில் சர்ச்சை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.