ஈஸ்டர் குண்டு தாக்குதல் விவகாரம்: உயர் நீதிமன்றில் மன்னிப்பு கோரிய முன்னாள் அதிகாரி
ஈஸ்டர் குண்டு தாக்குதல் (Easter Attack) தொடர்பில் உத்தரவிடப்பட்ட நட்டஈட்டை குறித்த காலக்கெடுவிற்குள் வழங்கத் தவறியமைக்காக, அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி நிலந்த ஜயவர்தன உயர் நீதிமன்றில் மன்னிப்பு கோரியுள்ளார்.
புலனாய்வுத் தகவல் கிடைத்தும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் நேன்று ( 07.10.2024) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான தகவல்களை முன்வைப்பதற்காக அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன (Nilantha Jayawardena) உயர்நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.
ஈஸ்டர் குண்ட தாக்குதல்
குறித்த தாக்குதலை தடுக்க தவறியதன் மூலம் அடிப்படை மனித உரிமைகளை அவர் மீறியுள்ளார் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததுடன், 75 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறு நீதிமன்றம் முன்னர் உத்தரவிட்டிருந்தது.
ஆனால் அவர் நட்ட ஈட்டை முழுமையாகச் செலுத்தத் தவறியதால், நீதிமன்ற உத்தரவின்படி அவருக்கு எதிராக சட்டமா அதிபர் நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டைத் தாக்கல் செய்தார்.
அது தொடர்பான உண்மைகளை முன்வைப்பதற்காக நேற்றையதினம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உயர் நீதிமன்றம் முன்னர் விடுத்த அறிவித்தலுக்கு அமைய நிலந்த ஜயவர்தன நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.
மன்னிப்பு கோரிய அதிகாரி
இதன்போது, நிலந்த ஜெயவர்தன எஞ்சிய இழப்பீட்டு தொகையான 65 மில்லியன் ரூபாயை செலுத்தி விட்டதாக, அவரின் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சந்தக ஜயசுந்தர உறுதிப்படுத்தினார்.
இதன்படி அவர் ஏற்கனவே 10 மில்லியன் ரூபாவை செலுத்தியிருந்த நிலையில், எஞ்சியிருந்த 65 மில்லியன் ரூபாய்களுடன், தற்போது முழுத் தொகையும் செலுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட்டவர்களும், தமக்கு விதிக்கப்பட்ட இழப்பீட்டு தொகைகளை செலுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |