ஞானசார தேரர் இலங்கை சூபி உலமா சபையின் தலைவர் சந்திப்பு!
இலங்கை சூபி உலமா சபையின் தலைவர் ஏ.அப்துல் ரவூப் மிஸ்பாஹி பஹஜ் உள்ளிட்ட குழுவினர், ஒரு நாடு - ஒரு சட்டம் தொடர்பான அரச தலைவர் செயலணிக்குழுவின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரரை சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில், சிங்கள- முஸ்லிம் மற்றும் பௌத்த - முஸ்லிம் மக்கள் மத்தியிலான சகவாழ்வு, சர்வமத சகவாழ்வு தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதனை தவிர இலங்கையில் வாழும் சூபி கலாசாரங்களை கொண்ட முஸ்லிம் சமூகத்திற்கு வஹாபிகள் மூலம் எதிர்நோக்க நேர்ந்துள்ள பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டதுடன் அவை தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை, இலங்கை சூபி உலமா சபையின் தலைவர் ஏ. அப்துல் ரவூப் மற்றும் அவரை பின்பற்றுவோரை இஸ்லாமிய மதத்தில் இருந்து வெளியேறியவர்கள் எனவும் ஷரியா சட்டத்திற்கு அமைய அவர்களை கொலை செய்ய வேண்டும் எனவும் கூறி பஃத்வா என்ற சமய கட்டளையை பிறப்பித்திருந்ததாகவும் சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
