சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் பொதுபல சேனா -பகிரங்க அறிக்கை வெளியிட்ட அமெரிக்கா!
பொதுபல சேனா அமைப்பின் மீது அமெரிக்கா பகிரங்கமானதும் கடுமையானதுமான குற்றசாட்டை முன்வைத்துள்ளது.
இது தொடர்பில் 2021 இல் சர்வதேச மத சுதந்திரம் குறித்த, தனது வருடாந்த அறிக்கையிலேயே அமெரிக்கா இதனை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
பொதுபல சேனா மீது அமெரிக்கா குற்றச்சாட்டு
சிங்கள பௌத்தமேலாதிக்கத்தினை பரப்புவதற்காகவும் மத மற்றும் இன சிறுபான்மையினத்தவர்களை கொச்சைப்படுத்துவதற்காகவும் பொதுபலசேனா தொடர்ந்தும் சமூக ஊடகங்களை பயன்படுத்துகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுபல சேனா போன்ற பௌத்த தேசியவாத குழுக்களினால் வெளிபடையாக தென்படும் வகையில் முன்னெடுக்கப்படும் சமூக ஊடக பிரசாரங்கள் சிறுபான்மை குழுக்களை இலக்குவைத்து வன்முறையை தூண்டுகின்றன என சிவில் சமூக அமைப்புகள் தெரிவிக்கின்றன.
குறிவைக்கப்படும் கிறிஸ்தவர்கள்
குறிப்பாக முஸ்லிம் சமூகத்தினர் இலக்கு வைக்கப்படுகின்றனர் என அவர்கள் தெரிவித்துள்ளனர் என அமெரிக்கா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இலங்கையின் தேசிய கிறிஸ்தவ சுவிசேசக்கூட்டணி, 2021 இல் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதும் போதகர்கள் மற்றும் அவர்களின் சபைகள் மீதும் இடம்பெற்ற 77 தாக்குதல்களை பதிவு செய்துள்ளது என தெரிவித்துள்ள அமெரிக்கா, வழிபாடுகள் குழப்பப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன எனவும் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமன்றி 11 தடவை போதகர்கள், அவர்களின் சபைகள் அவர்களின் குடும்பத்தவர்கள் குழுவினர் தாக்கப்பட்டனர் என இலங்கையின் தேசிய கிறிஸ்தவ சுவிசேசக்கூட்டணி தெரிவித்துள்ளது.
படையினரால் முஸ்லிம் அமைப்புக்கள் கண்காணிப்பு
மேலும் 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லிம் அமைப்புகளும் அரசசார்பற்ற அமைப்புகளும் தங்கள் நடவடிக்கைகளை காவல்துறையினர் கண்காணிப்பதும் துன்புறுத்தல்களும் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளன என அமெரிக்காவின் மத சுதந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்களின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை செய்வதற்காக இலங்கையின் பாதுகாப்பு படையினர் தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்கின்றனர் தங்கள் அலுவலகங்களிற்கு வருகை தருகின்றனர் என முஸ்லிம் அமைப்புகள் தெரிவித்தன எனவும் அமெரிக்காவின் மத சுதந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.