இந்தியாவிடம் மேலும் 1.5 பில்லியன் டொலர் நிதியுதவி கோரும் இலங்கை
இலங்கையில் நீடித்து வரும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்தியாவிடம் மேலும் ரூ.11 ஆயிரம் கோடி அளவுக்கு அந்த நாடு நிதியுதவி கேட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இலங்கையில் அன்னிய செலாவணி கையிருப்பு வேகமாக தீர்ந்து வருவதால் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பணவீக்கம் அதிகரித்து விலைவாசி உச்சத்தில் இருக்கிறது. எரிபொருள் வாங்க பணம் இல்லாததால் மின் நிலையங்கள் உற்பத்தியின்றி முடங்கியுள்ளன. இதனால் நாடு முழுவதும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இவ்வாறு தொடர்ந்து சிக்கலை அனுபவித்து வரும் இலங்கைக்கு இந்தியா உதவிக்கரம் நீட்டி வருகிறது. அந்தவகையில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்காக ஏற்கனவே 1 பில்லியன் டொலர் (சுமார் ரூ.7,400 கோடி) நிதியுதவி வழங்கப்பட்டது. மேலும் இந்தியாவிடம் இருந்து எரிபொருள் இறக்குமதிக்காக 500 மில்லியன் டொலர் (சுமார் ரூ.3,700 கோடி) கூடுதலாக அளிக்கப்பட்டது.
இதைத்தவிர இலங்கையின் மொத்த கையிருப்பை மேம்படுத்துவதற்காக 400 மில்லியன் அமெரிக்க டொலர் நாணய மாற்று வசதியை இந்தியா அறிவித்தது. அத்துடன் 515 மில்லியன் டொலர் ஆசிய நாணய யூனியன் தீர்வையும் ஒத்திவைத்தது. இந்த உதவிகளால் இலங்கையின் அன்னிய செலாவணி கையிருப்பு கரைவது கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாக இலங்கையின் பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்தியாவிடம் மேலும் 1.5 பில்லியன் டொலர் (சுமார் ரூ.11 ஆயிரம் கோடி) நிதியுதவி கேட்டிருப்பதாகவும், இது கிடைக்கும் என நம்புவதாகவும் வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரீஸ் தெரிவித்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் கூறுகையில்,
‘டெல்லியில் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன், இலங்கை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச நடத்திய பேச்சுவார்த்தையின் விளைவாக நாம் ஒரு உதவியை பெற முடிந்தது. அதைப்போல மேலும் 1.5 பில்லியன் டொலர் நிதியுதவி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது’ என்று தெரிவித்தார்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு உதவுவதற்காக சர்வதேச நாணய நிதியத்தை அணுகும் வாய்ப்பும் இருப்பதாக கூறிய பீரீஸ், அந்த நிதியத்தின் உறுப்பினராக நாம் இருப்பதால், அதற்கான கதவுகளும் திறந்தே இருக்கின்றன என்றும் கூறினார்.
இலங்கையில அன்னிய செலாவணி நெருக்கடி ஏற்பட்டுள்ள போதிலும், முற்றிலுமாக அது தீர்ந்து விடவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறு அந்த ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.