அநுராதபுரத்தில் இடம்பெற்ற இரட்டைப்படுகொலை!
அனுராதபுரம் பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் இரு ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் 46 மற்றும் 31 வயதுகளையுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த படுகொலைச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இரட்டைக்கொலை
அநுராதபுரம், எப்பாவல - எந்தகல சந்தியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களைக் கைது செய்வதற்காக காவல்துறையின் சில குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
கூரிய ஆயுதங்களால் தாக்குதல்
நேற்று இரவு வீட்டின் உரிமையாளரும் அவரது நண்பரும் மது அருந்திக் கொண்டிருந்த வேளையில், சம்பவ இடத்திற்கு சென்ற சிலர் கூரிய ஆயுதங்களால் அவர்களை தாக்கியதாக, காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும் உயிரிழந்த இருவரும் மது பாவனை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் எனவும் விசாரணைகளை முன்னெடுத்து வரும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
