தென்னிலங்கையில் இராணுவ மேஜரின் அத்துமீறிய செயற்பாட்டால் விகாரை வளாகத்திற்குள் ஏற்பட்ட பதற்றம்!
சிறிலங்கா இராணுவ மேஜர் ஒருவர் பொது இடத்தில் வைத்து தனது மனைவியைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவம் பௌத்த விகாரை ஒன்றில் வைத்தே இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சண்டை காரணமாக விகாரைக்கு வந்திருந்த பக்தர்கள் மத்தியில் பெரும் பதற்றம் உருவானதாக கூறப்படுகிறது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பனாகொடை இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ மேஜர் ஒருவர் பௌர்ணமி தினமான நேற்று பாணந்துறை பிரதேசத்தில் உள்ள பிரபலமான விகாரை ஒன்றில் வைத்து தனது மனைவியை தாக்கியுள்ளார்.
சிறுவர்கள் உட்பட விகாரைக்கு வந்திருந்த பெருந்திரளான பக்தர்களுக்கு எதிரில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. மேஜரின் தாக்குதலுக்கு உள்ளான மனைவி, பாணந்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சந்தேக நபரான இராணுவ அதிகாரியை பாணந்துறை தெற்கு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இருவருக்கும் இடையில் இருந்து வந்த குடும்ப சண்டை காரணமாக பிரிந்து வாழும் மனைவி, நீதிமன்ற உத்தரவுக்கு அமைய மேஜருக்கு மகனை காண்பிப்பதற்காக விகாரைக்கு அழைத்து வந்திருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
