பல இலட்சம் பெறுமதியான கொள்ளையில் ஈடுபட்ட சிறிலங்கா இராணுவத்தினர்!
கொலன்ன பகுதியில் கொள்ளையிடப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் குற்றத்திற்கு பயன்படுத்திய மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் இரண்டு இராணுவ வீரர்கள் மற்றும் இராணுவத்தில் இருந்து தப்பி வந்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கொலன்ன புதிய நகரில் வசித்து வரும் இரண்டு இளைஞர்களுக்கு சொந்தமான சுமார் 7 லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு மோட்டார் சைக்கிள்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன என கொலன்ன காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மறைத்து வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்
கொள்ளையிடப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் வெலிமடை, கெப்பட்டிபொல மற்றும் திஸ்ஸமஹாராம லுணுகம்வெஹெர பிரதேசங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக எம்பிலிப்பிட்டிய பணாமுர, மொனராகலை நக்கல மற்றும் அரலங்கவில பகுதிகளை சேர்ந்த சந்தே நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீதிமன்றத்தில் முன்னிலை
இவர்களில் இரண்டு பேர் இராணுவத்தில் கடமையாற்றி வருவதுடன் விடுமுறையில் வீட்டுக்கு வந்துள்ளனர். மற்றைய சந்தேக நபர் இராணுவத்தில் கடமையாற்றிய நிலையில் தப்பியோடியவர் எனவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன் கொலன்ன காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
