ரணிலுக்கு எதிரான ஆளும் கட்சியின் செயற்பாடு - நாடாளுமன்றில் பகிரங்கப்படுத்திய மைத்திரி
சர்வ கட்சி அரசாங்கத்தை அமைக்கும் நோக்ககத்திற்கு ஆளும் கட்சி தடையாக செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சர்வ கட்சி அரசாங்கத்தை அமைக்கும் நோக்கத்திற்கு பிரதான ஆளும் கட்சி தடையாக செயற்பட்டதாலேயே சர்வ கட்சி அரசாங்கத்தை அமைக்கும் முயற்சி முழுமையாக தடைப்பட்டது என முன்னாள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (நவ. 18) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான நான்காவது நாள் விவாதத்தில் உரையாற்றும் போது தெரிவித்திருந்தார்
மேலும், பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என கூறியிருந்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சிறந்த விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில் கடினமான திட்டங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
பண்டாரநாயக்காவின் ஆட்சி
எதிர்க்கொண்டுள்ள சமூக பொருளாதார பாதிப்பில் இருந்து மீள்வதற்கான பல சிறந்த திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
பொருளாதார கட்டமைப்பில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளக்கு தீர்வு காண வேண்டுமாயின் முக்கிய நிறுவனங்கள் சுயாதீனமாக செயற்பட வேண்டும். மனித உரிமைகள் அனைத்து விடயங்களுக்கும் செல்வாக்கு செலுத்தும் என்பதை அனைவரும் முதலில் தெரிந்துக் கொள்ள வேண்டும்.
பண்டாரநாயக்காவின் ஆட்சிகாலத்தில் எடுக்கப்பட்ட ஒருசில தீர்மானங்கள் பொருளாதாரத்தை நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது என தற்போதைய சிறிலங்கா அதிபர் குறிப்பிட்டார்.
பசுமை பொருளாதாரம்
அவ்வாறாயின் 1948 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையான அரசாங்கத்தின் செயற்பாடுகளை மீள்பரிசீலனை செய்ய வேண்டும்.
சுற்றுச் சூழலுக்கு பொருத்தமான பசுமை பொருளாதாரம்,எண்ணியல்(Digital) பொருளாதாரம் தொடர்பில் அதிபர் முன்வைத்துள்ள பரிந்துரைகள் வரவேற்கத்தக்கது.
பசுமை பொருளாதார திட்டத்தை செயற்படுத்த துறைசார் நிபுணர்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள வேண்டும். பொருளாதார பாதிப்பால் நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
விவசாயிகளும்,கடற்றொழிலாளர்களும் பெரும் துயரங்களை எதிர்கொண்டுள்ளார்கள். விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான உரம் இதுவரை முழுமையாக விநியோகிக்கப்படவில்லை.
ஆளும் கட்சி எதிர்ப்பு
பொருளாதார பாதிப்பிற்கு யார் காரணம் என பரிசோதனை நடத்தாமல் எதிர்காலம் தொடர்பில் கவனம் செலுத்துவது காலத்திற்கு பொருத்தமானதாக அமையும்.
நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட்ட வேண்டும். பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்குமாறு சிறி லங்கா சுதந்திர கட்சி வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க முன்னாள் அதிபர் கோட்டபய ராஜபக்ச பொறுப்புடன் செயற்பட்டார்.
தற்போதைய அதிபரும் பொறுப்புடன் செயற்பட்டார். ஆனால் ஆளும் கட்சியினர் சர்வக்கட்சி அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் துரதிஸ்டவசமாக சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்கும் முயற்சி முழுமையாக தடைப்பட்டது” என கூறியிருந்தார்.
