இலங்கையில் நிலையற்ற பொதுக் கடன் - களமிறங்கிய சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம்!
சிறிலங்காவிற்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் தொழில்நுட்ப மட்ட கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளனர்.
இந்த கலந்துரையாடல், இன்று காலை சர்வதேச நாணய நிதிய குழுவினருக்கும், சிறிலங்கா அதிகாரிகளுக்கும் இடையில் மத்திய வங்கியில் நடைபெற்றது.
மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
பணிக்குழாம் மட்ட ஒப்பந்தத்தை நோக்கி முன்னேறுவதே திட்டம்
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டுக்கான, பணிக்குழாம் மட்ட ஒப்பந்தத்தை நோக்கி முன்னேறுவதே இந்த விஜயத்தின் நோக்கம்.
மேலும் இலங்கையின் பொதுக் கடன் நிலைத்தன்மையற்றது என மதிப்பிடப்படுவதால், சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவின், விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் ஒப்புதலுக்கு, கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்காக, இலங்கையின் கடன் வழங்குநர்களின் போதுமன உத்தரவாதங்கள் அவசியமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் சிறிலங்காவிற்கான சிரேஷ்ட தூதுவர் பீற்றர் புருவர் மற்றும் சிறிலங்கா குழுவின் தலைவர் மசாஹிரோ நொசாகி ஆகியோர் தலைமையில் இந்தக் குழு வழிநடத்தப்படவுள்ளது.
இலங்கையின் பங்குதாரர்களுடன் பேச்சுவார்த்தை
எனவே சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் குழு எதிர்வரும் 31 ஆம் திகதி வரை சிறிலங்காவில் தங்கிருக்கும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
இந்த விஜயத்தின் போது, சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள், ஏனைய பங்குதாரர்களுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.