இலங்கையின் நிலையை வெளியிட்டது சர்வதேச நாணய நிதியம்
இலங்கையின் 2022 ஆம் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சிக் கணிப்பை 2.6 வீதமாக சர்வதேச நாணய நிதியம் குறைத்துள்ளது.
இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக் கணிப்பின் பிரகாரம் 2023 ஆம் ஆண்டு 2.7 வீத வளர்ச்சியும் 2029 ஆம் ஆண்டு 2.9 வீத வளர்ச்சியும் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட உலகப் பொருளாதார கண்ணோட்ட கணிப்பின் பின்னர், அனைத்துலக பொருளாதார நிலைமைகள் கணிசமான அளவு மோசமடைந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.
அத்துடன் ஒமைக்ரோன் வைரசின் குறுகிய கால தாக்கத்திற்கு பின்னர், இவ்வாண்டின் இரண்டாவது காலாண்டில் இருந்து உலகளாவிய மீட்சி வலுவடையும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.
எனினும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு மற்றும் போரை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகள் காரணமாக அனைத்துலக பொருளாதார கண்ணோட்டமானது மோசமடைந்துள்ளது எனவும் சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.
அதன்படி, இலங்கையின் 2022 ஆம் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சியானது கடந்த ஜனவரி மாதத்தில் அறிவிக்கப்பட்டதை விட, 0.8 வீத வீழ்ச்சியை பதிவுசெய்து, 3.6 வீதமாக பதிவாகும் என சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் 2023 ஆம் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சியும் 0.2 வீதத்தால் வீழ்ச்சி அடையும் எனவும் சர்வதேச நாணய நிதியம் தனது புதிய கணிப்பீட்டில் கூறியுள்ளது.