கல்வி அமைச்சுக்கு முன்பாக பதற்றம் - கலகத்தடுப்பு காவல்துறை குவிப்பு!
இசுருபாயவில் உள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து பத்தரமுல்லையில் அமைந்துள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
அதன் போது பல்கலைக்கழகங்களுக்கிடையிலான மாணவர் சம்மேளனத்தின் எதிர்ப்பாளர்கள் கல்வி அமைச்சுக்குள் நுழைய முயற்சித்தவேளை, காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மகாபொல புலமைப்பரிசில் வழங்கப்படாமையை சுட்டிக்காட்டியும் மற்றும் பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலையில் உணவுகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டமையை கண்டித்தும் மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்தும் இந்த போராட்டம் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த இடத்திற்கு காவல்துறையினர் வரவழைக்கப்பட்டதோடு, கலகத்தடுப்பு காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். இதன் போது ஆர்ப்பட்டக்காரர்களை கட்டுப்படுத்துவதற்கு கண்ணீர்ப்புகைக்குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இருப்பினும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து செல்லாது தொடர்ந்தும் போராடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


