தென்னிலங்கையில் ஒன்று கூடிய தமிழ் பேசும் மக்களின் கட்சிகளின் தலைவர்கள்!
தமிழ் பேசும் மக்களின் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் கூட்டம் கொழும்பில் நடைபெற்றது.
13வது திருத்தச் சட்டத்துக்கு அப்பாலான அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடலும், ஒப்பமிடுதலும்’ என்ற தலைப்பில் டெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனின் ஏற்பாட்டில் இந்த கூட்டம் நடைபெற்றது.
கொழும்பு, வெள்ளவத்தையிலுள்ள தனியார் விடுதியில், இன்று இந்தக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், மனோ கணேசன், சி.வி.விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், ரவூப் ஹக்கீம்,பழனி திகாம்பரம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன் இவர்களுடன் என். ஸ்ரீகாந்தா ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ள இலங்கை தமிழரசுக் கட்சி, கடந்த 12 ஆண்டுகளாக இடம்பெற்ற பல்வேறு தேர்தல்களில் தங்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் ஊடாகத் தமிழ் மக்களின் ஆணையைப் பெற்ற விடயங்களுக்கு உட்பட்ட ஆவணங்களில் மட்டுமே கையெழுத்திடுவோம் எனவும் தெரிவித்துள்ளது.
அத்துடன் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தமிழ்க் கட்சிகளின் கூட்டத்தில் ஆவணம் தயாரிக்கப்பட்டிருந்தால் மட்டுமே அதில் மாவை சேனாதிராஜாவும் இரா.சம்பந்தனும் கையெழுத்திட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.


