தென்னிலங்கையில் பதற்றம் -ஹிருணிகா பிரேமச்சந்திர கைது..!
இரண்டாம் இணைப்பு
ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அணி தேசிய அமைப்பாளர் ஹிருணிகா பிரேமச்சந்திர சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் கொழும்பில் வீதி நாடகத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களை கறுவாத்தோட்ட காவல்துறை கைது செய்துள்ளனர்.
முதலாம் இணைப்பு
பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் காரியாலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் இன்று காலை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டத்தில் கொழும்பில் காவல்துறையினரைப் போன்று உடையணிந்து வீதிநாடகம் மேற்கொண்ட இருவரை கறுவாத்தோட்ட காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கொழும்பில் ஐ.நா முன்பாக வீதி நாடகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
காவல்துறை குவிப்பு
இதனை ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அணியினர் முன்னெடுத்துள்ளனர். இதில் பெண்கள் செம்மஞ்சள் நிற உடை மற்றும் செம்மஞ்சள் நிற பட்டி அணிந்து, செம்மஞ்சள் நிற கொடிகளை ஏந்திய வண்ணம் கலந்து கொண்டனர்.
இவ்வாறான நிலையில், அப்பகுதியில் பெருமளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து, கொழும்பு - மாகமசேகர மாவத்தை பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. குறித்த இடத்தில் வீதி நாடகம் நடத்த வேண்டாம் என காவல்துறையினர் அறிவுறுத்திய நிலையில் அதனையும் மீறி ஹிருணிகா உள்ளிட்ட குழுவினர் வீதி நாடகத்தை மேற்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமையாலேயே அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
கைது
அத்துடன் அறிவுறுத்தலை மீறி நடந்து கொண்டதாக தெரிவித்து, காவல்துறையினரைப் போன்று உடையணிந்து வீதிநாடகம் மேற்கொண்ட இருவரை கறுவாத்தோட்ட காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அதனையடுத்து ஹிருணிகா உள்ளிட்ட பெண்கள் குழுவினர் அனைவரும் காவல்நிலையத்திற்கு சென்று காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், தம்மையும் கைது செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளனர்.
அமைதியின்மை
இதன்காரணமாக அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வீதிநாடகத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்யுமாறு வலியுறுத்தி காவல் நிலையத்திற்கு முன்பாக அமர்ந்து அதில் கலந்து கொண்ட பெண்கள் அனைவரும் அமைதி போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




நல்லூர் கந்தசுவாமி கோவில் 8ஆம் நாள் மாலை திருவிழா
