இலங்கையில் முக்கிய வரிக்கொள்கைகள் பின்பற்றப்படுவதில்லை : கலாநிதி ஷர்மினி கூரே குற்றச்சாட்டு
கடந்த ஆண்டில் (2022) நடைமுறைப்படுத்தப்பட்ட வரிசீர்திருத்தங்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களித்திருந்தாலும் சில முக்கிய வரிக்கொள்கைகளை இலங்கை பின்பற்றுவதில்லை என்று அதிபரின் ஆலோசகரும் சர்வதேச நாணய நிதியத்தின் முன்னாள் பணிப்பாளருமான கலாநிதி ஷர்மினி கூரே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
"பொருளாதார ஊக்குவிப்புகளை சிதைக்காமல், சிறந்த வரி முறைகள் மற்றும் வருமானத்தை உயர்த்த வேண்டும் என்றும், இலங்கையின் வரிவிதிப்பு முறையானது மறைமுக வரிகளையே பெரிதும் நம்பியுள்ளது என்றும் தெரியவருகிறது.
உழைப்புக்கான வரி விதிப்பு
மூலதனத்தை விட உழைப்புக்கான வரி விதிப்பினை இலங்கை ஆதரிக்கிறது, இது ஒரு நியாயமற்ற செயன்முறையாகும்.
ஏனெனில் மறைமுக வரிகள், வருமானத்தில் இருந்து பொருட்கள் மற்றும் சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக அதிகளவான செலவுகளை மேற்கொள்ளும் ஏழைகளுக்கு பாதிப்பினை ஏற்படுத்துகிறது.
அதேவேளை மூலதன வருமானமாக அது பணக்காரர்களிடம் வந்து சேர்வதால், இலாபம் ஈட்டுபவர்கள் தொடர்ந்து இலாபம் ஈட்ட கஷ்டத்தில் வாடும் ஏழைகள் தொடர்ந்தும் பாதிக்கப்படுகிறார்கள்.
ஊழல் அபாயங்களை
இந்நிலையில், தனிநபர் மற்றும் பெருநிறுவன வரிகளில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு ஒரு சாதகமான முடிவாக அமைகிறது என்றாலும், மறைமுக வரிகள் குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களைப் பெரியளவில் பாதிக்கும்.
இந்த நேரெதிரான தன்மைகள் ஊழல் அபாயங்களை உருவாக்கக்கூடிய வாய்ப்புக்களை கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்."
மேலும், வரிக்கொள்கையின் நிர்வாகத்திறனினை முறையாக பேணுவதற்கு புதிதாக 10 அம்சங்களையும் அவர் முன்மொழிந்துள்ளார், அவையாவன,
- வரி விகிதங்கள் சீரான முறையில், சிதைக்கப்படாத வகையில் அமைக்கப்பட வேண்டும் என்று ஒரு விரிவான வரிச் சட்டம் இயற்றப்பட வேண்டும்
- ஏற்கனவே உள்ள வரி விலக்குகள் 3-5 ஆண்டுகளில் முடிவடையும் வகையில் மீளமைக்கப்பட வேண்டும்.
- மூலோபாய அபிவிருத்தி திட்டங்களுக்கான சட்டம் மற்றும் சிறப்பு பொருட்கள் வரிச்சட்டம் ஆகியவற்றை நீக்க வேண்டும்.
- கொழும்பு துறைமுக நகரச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் வரிச் சலுகைகளை இடைநிறுத்தி, புதிய வரிச் சலுகைகளுக்கான முன்மொழிவுகளை நிதி அமைச்சின் கீழ் கொண்டு வரவேண்டும்.
- முறையான சட்டம் இயற்றப்படுவதற்கு முன் நிதி அமைச்சினால் ஒரு வரிக் கொள்கைத் துறை உருவாக்கப்பட வேண்டும்.
- நிதியமைச்சு ஒவ்வொரு ஆண்டும் ஏற்கனவே உள்ள மற்றும் புதிய வரிச் செலவினங்களை சுயாதீனமாக கணக்கிட வேண்டும்.
- வருவாய்த் துறைகளின் நிர்வாகத்தை கருவூலச் செயலர் மேற்பார்வை செய்ய வேண்டும்.
- பணக்காரர்களின் வரி ஏய்ப்பைக் கண்காணிக்க வேண்டும்.
- RAMIS அமைப்பை முழுமையாக செயல்படுத்துவது உட்பட சுங்கம், கலால் மற்றும் IRD மூலம் வரி வசூல்களை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் ஊழல்களுக்கான வாய்ப்புகளைக் குறைக்க வேண்டும்.
- ஒரு வரி நிர்வாகச் சட்டத்தை இயற்ற வேண்டும்.
போன்ற அம்சங்களின் மூலம் சிறந்த வரிக்கொள்கை ஒன்றை செயற்படுத்த முடியும் என அவர் கூறினார்.