அவலத்தில் இருந்து தப்பியது இலங்கை - ஆளும் தரப்பு பெருமிதம்
மைத்திரி - ரணில் ஆட்சி தற்போதும் இலங்கையில் இருந்திருந்தால் இந்தியாவின் தற்போதைய நிலைமையே ஏற்பட்டிருக்கும் என்று ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட சாகர காரியவசம், இந்தியாவில் வீதிகள் தோறும் மக்கள் மரணிப்பதை போன்ற அவலம் இலங்கையில் ஏற்படாமல் தமது அரசாங்கம் தடுத்துள்ளதாக பெருமிதம் வெளியிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
ஐரோப்பா, இந்தியா மற்றும் அபிவிருத்தியடைந்த நாடுகள் எதிர்கொண்டிருக்கும் நிலையை நாங்கள் பார்க்கின்றோம்.
தேவையான நேரத்தில் எமது அரசாங்கத்தை நியமிப்பதற்கும் எம்மை ஆட்சியில் அமர்த்தியமைக்கும் 69 இலட்சம் மக்களுக்கு விசேட நன்றியை இந்த சந்தர்ப்பத்தில் தெரிவிக்கின்றோம்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அரசாங்கம், அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியில் இருந்திருக்காவிட்டால் நாடு எந்த அளவிலான பாதிப்பை எதிர்கொண்டிருக்கும் என்பதை அனுமானிக்கவே முடியாது.
இந்த நாட்டில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்படும் திகதி, நேரம், இடம் ஆகியன தொடர்பான தகவலை இந்திய உளவுத்துறையினர் அளித்திருந்தும் அதனை தடுக்க முடியாத அரசாங்கம் ஆட்சியிலிருந்ததை மறந்துவிடக்கூடாது.
அதுபோன்ற அரசாங்கம் இந்தச் சந்தர்ப்பத்தில், குறிப்பாக சஜித் பிரேமதாஸ உள்ளிட்டவர்கள் ஆட்சியில் இருந்திருந்தால் மக்கள் வீதிகள் தோறும் மரணித்து கிடக்கின்ற நிலைமையே ஏற்பட்டிருக்கும் என்றார்.