பொருளாதார நெருக்கடியின் முடிவு: நம்பிக்கை வெளியிட்ட அமைச்சர்
நாட்டின் கடனை மறுசீரமைக்க கடன் வழங்குநர்களுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் மூலம் நாட்டின் பொருளாதார நெருக்கடி முடிவுக்கு வந்துள்ளமை உறுதியானது என அரசாங்கக் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்ட முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுடன் இன்று (27) உடுகம்பலையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட போது இதனைக் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அபிவிருத்தி திட்டங்கள்
அத்துடன், வெளிநாட்டுக் கடனை மறுசீரமைக்க கடன் வழங்குபவர்கள் சம்மதிக்க வைத்தது நாட்டின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாகும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, தேவைக்கு ஏற்ப மீண்டும் சர்வதேச கடன்களை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்த அமைச்சர், பாதியில் நிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை மீள ஆரம்பிப்பதுடன் புதிய அபிவிருத்தி திட்டங்களையும் ஆரம்பிக்க வாய்ப்பு ஏற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கடன் உடன்படிக்கை
இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளுடனான இருதரப்பு கடன் மறுசீரமைப்பு தொடர்பான இறுதி இணக்கப்பாடு நேற்றையதினம் எட்டப்பட்டது.
இந்த நிலையில், இலங்கை தனது கடனில் 4.2 பில்லியன் அமெரிக்க டொலர்களை மறுசீரமைப்பதற்காக சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியுடனான கடன் உடன்படிக்கை கைச்சாத்திட்டமை குறிப்பிடடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |