இலங்கை எடுத்துள்ள அவசர முடிவு
இலங்கையின் பொருளாதாரம் முற்றாக வீழ்ச்சியடைந்த பின்னணியில் இந்திய வெளியுறவுச் செயலாளர் வினய் மோகன் குவாத்ரா தலைமையிலான சிறப்பு தூதுக்குழு இன்று இலங்கைக்கு வந்து பேச்சுக்களை நடத்திய நிலையில் இந்தியா, சீனா, ஜப்பான் உட்பட்ட நாடுகளின் இணைத்தலைமையுடன் நன்கொடையாளர் மாநாடு ஒன்றை நடத்த இலங்கை முடிவு செய்துள்ளது.
இலங்கையின் பொருளாதாரம் முற்றாக வீழ்ச்சியடைந்து விட்டதாக இலங்கையின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று அறிக்கையிட்ட பின்னணியில், இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன்கள் அறவிடமுடியா கடனாக மாற்றம் அடைவதை தடுக்க கடன்வழங்கிய முதலீட்டு நிறுவனங்கள் துரித நகர்வுகளை எடுத்துவருகின்றன.
இலங்கைக்கு எதிரான சட்ட நகர்வுகள்
குறிப்பாக அமெரிக்காவை தளமாக கொண்ட இந்த நிறுவனங்கள் இலங்கையின் முதலீட்டு பத்திரங்களை கொள்வனவு செய்துள்ள நிலையில், அந்த நிறுவனங்கள் தமக்கு இடையில் ஒரு ஒருங்கிணைப்பை உருவாக்கி வட்டியுடன் சேர்த்து தமது கடன் பணம் மீண்டும் வழங்கப்படவேண்டும் என்ற அழுத்தங்களை உருவாக்கியுள்ளன.
குறித்த சில நிறுவனங்கள் தமது கடன்களில் விட்டுக்கொடுப்புகளை செய்யத் தயாராக இல்லையென்பதால் இலங்கைக்கு எதிரான சட்ட நகர்வுகளுக்கும் தயாராகி வருகின்றன.
இதற்காக அவை நிதி முகாமைத்துவ சட்ட நகர்வுகளில் பிரபலமாக உலகின் பிரபல Rothschild & Co நிறுவனத்தையும் தமது ஆலோசக நிறுவனமாக நியமித்துள்ளன.
அமெரிக்க திறைசேரியின் சிறப்புக் குழு வருகை
அமெரிக்க திறைசேரியில் இருந்து ஒரு சிறப்புக் குழு எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கை வரும் நிலையில் இந்த நகர்வுகள் வெளிப்பட்டுள்ள பின்னணியில், இவ்வாறான நெருக்கடிகளையும் நிதிநெருக்கடிகளையும் சமாளிக்க இந்தியா சீனா, ஜப்பான் உட்பட்ட நாடுகளின் இணைத்தலைமைகளுடன் அவசர நன்கொடையாளர் மாநாடு ஒன்றை நடத்த இலங்கை முடிவுசெய்துள்ளதாக தெரிகிறது.