வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள 700 பில்லியன் டொலர்! நாடாளுமன்ற உறுப்பினர் தகவல்
அரசு பெற்ற கடன்களுக்காக இப்பொழுது சாதாரண மக்களிடமிருந்து பணத்தை கறந்தெடுக்கும் வரி மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஶ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு வவுணதீவுப் பகுதியில் நேற்று (20) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இதனை குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், பொருட்களின் விலை இப்போது அதிகரிக்கப்பட்டுள்ளது, இது மேலும் அதிகரிக்கப்பட்டு பொருட்கள் வாங்க முடியாத நிலை எதிர்காலத்தில் ஏற்படவுள்ளது.
700 பில்லியன் டொலர் பதுக்கி வைப்பு
அரசியல்வாதிகள் சில செல்வந்த முதலைகளால் சட்டவிரோதமான முறையில் ஏறக்குறைய 700 பில்லியன் டொலர் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இது, முன்னர் 56 பில்லியன் டொலர் என்றார்கள் இப்போது 700 பில்லியன் டொலர் என கூறப்படுகின்றது.
இலங்கைக்கு கொண்டு வரப்படுமாக இருந்தால்
56 பில்லியன் டொலர் என்றாலும் அதை இலங்கைக்கு கொண்டு வரப்படுமாக இருந்தால் மக்களிடம் வரி அறவிட வேண்டியதில்லை, பொருட்களை அதிக விலைக்கு விற்க வேண்டியதில்லை. அரசு செய்த ஊழல், மோசடிகள், அடாவடி தனமான செலவீனங்களுக்காக இப்போது வரி என்ற பெயரில் மக்களின் தலையில் சுமை ஏற்றப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் இரண்டு இராஜாங்க அமைச்சர்கள் இருக்கின்றார்கள் அவர்கள் அரசாங்கத்தின் வரிவிதிப்பு சட்டங்களுக்கு நாடாளுமன்றத்தில் கை உயர்த்தி சம்மதம் தெரிவித்து விட்டு, இங்கு வந்து அரசாங்கம் மக்கள் மீது வரி விதிக்கக் கூடாது எனும் தோரணையில் பேசுகின்றார்கள். இவர்கள் "பூனைக்கும் தோழன் பாலுக்கும் காவலன் ' என்பது போல் இருக்கின்றார்கள்.
மக்களுக்கு கிடைக்க வேண்டியவற்றை
அரசாங்கத்துடன் ஒன்றாக இருந்தால் மக்களுக்கு கிடைக்க வேண்டியவற்றை பெற்றுக் கொடுக்க வேண்டும். இல்லா விட்டால் அரசிலிருந்து வெளியேற வேண்டும். மட்டக்களப்பில் கால்நடை பண்ணையாளர்கள் தாம் வாழ்வதற்காக போராடிக் கொண்டிருக்கின்றார்கள், அவர்கள் இதுவரை சுமார் 252 மாடுகளை இழந்திருக்கின்றார்கள்.
கிழக்கை பாதுகாப்போம், கிழக்கை மீட்போம் என்கின்ற பிள்ளையான், வியாழேந்திரன் போன்றோர் கைகட்டி, வாய் பொத்தி மெளனிகளாக இருக்கின்றனர். என அவர் தெரிவித்தார்.