இலங்கை விவகாரத்தில் சீனா கரிசனை
இலங்கைக்கு உதவ தயார்
பொருளாதார நெருக்கடிகளில் இருந்து விடுபடுவதற்கும், கடன் சுமைகளில் இருந்து மீள்வதற்கும் இலங்கைக்கு உதவ தயாராக உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஜாவோ லிஜியான் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஒரு பில்லியன் டொலர் கடனுதவியை கோரியுள்ள போதிலும், சீனா உதவிகளை வழங்கவில்லையென அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச அண்மையில் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்திருந்தார்.
இந்தக் கருத்து தொடர்பில் சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஜாவோ லிஜியானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ஜாவோ லிஜியான், சீனா தனது பாராம்பரிய நட்பு மற்றும் அயல்நாடான இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளை அவதானித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
சீன உதவி
இலங்கையின் பொருளாதார சமூக அபிவிருத்திக்கு சீனா தன்னால் முடிந்த அளவிற்கு உதவிகளை வழங்கி வருகின்றது எனவும், இலங்கை தனது வெளிநாட்டுக் கடன்களை செலுத்த முடியாத நிலையேற்பட்டுள்ளது என அறிவித்ததும், சீனா தொடர்புடைய பிணைமுறிகள் கடன்களை ஒழுங்காக கையாள்வதற்கான பேச்சுவார்த்தைகளை இலங்கையுடன் மேற்கொண்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கும், கடன்களை குறைப்பதற்கும், பேண்தகு அபிவிருத்தியை அடைவதற்கும் உதவுவதற்கு சீனா பங்களிப்பை வழங்கும்.
இலங்கை வெளிநாட்டு முதலீட்டாளர்களினதும், நிதி சகாக்களினதும் நலன்களை பாதுகாப்பதற்கான நியாபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என சீனா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.