நிபந்தனைகளுடன் இலங்கையை மீட்க முன்வந்த புலம்பெயர் அமைப்பு
ஒரு மாதத்திற்குள் இலங்கையை மீட்க தாங்கள் தயார்
ஒரு மாதத்திற்குள் இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க தாங்கள் தயார் என சுவிட்சர்லாந்தின் இலங்கை தேசப்பற்றுள்ள புலம்பெயர் அமைப்பு தெரிவித்துள்ளது.
குறித்த அமைப்பின் செயற்பாட்டாளரான, சுவிட்சர்லாந்தின் லூசர்ன் பல்கலைக்கழக ஆய்வாளர் கலாநிதி நிலங்க சமரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
இலங்கைக்கு மாதாந்தம் தேவையான 800 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க நாம் தயார்.
வரைபடத்தை காண்பித்தல் அவசியம்
நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க தேசிய அரசாங்கம் ஊடாக பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டால் நாட்டுக்குத் தேவையான பணம் வழங்கப்படும்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து எப்படி மீள்வது? சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகளில் இருந்து மீள்வது எப்படி? புதிய தேசியமாக நாடு எப்படி மீண்டு வரும் என்பது தொடர்பில் அரசாங்கம் மற்றும் எதிர்கட்சி இணைந்து எங்களுக்கு ஒரு வரைபடத்தை காண்பித்தால் இலங்கைக்கு உதவுவோம்.
எந்தெந்த அர்ப்பணிப்புகளை செய்கின்றோம் என்பது தொடர்பிலும் அரசாங்கம் மற்றும் எதிர்கட்சியினர் இணைந்து அனைத்துக் கட்சி தேசிய பேரவையின் ஊடாக பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டால் ஒரு மாதத்திற்குள் இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க நாங்கள் தயார் என அவர் தெரிவித்துள்ளார்.