சர்வதேச உதவியுடன் தமிழருக்கான உரிமையை வென்றெடுப்பதற்கு இதுவே தருணம்!
அரசாங்கம் பொருளாதார ரீதியில் பலவீனமடைந்துள்ள சூழ்நிலையில் வெளிநாடுகளின் உதவியுடன் தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஈ. பி.ஆர்.எல்.எப் கட்சியின் மத்தியகுழு கூட்டம் இன்று வவுனியாவில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையில் இடம்பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“ஜனநாயக அமைப்புக்கள் அனைத்தும் இன்று முடக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் 13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவோம் என கூறினாலும் கூட இதுவரை அது தொடர்பில் எவ்வித நடவடிக்கையையும் முன்னெடுத்ததாக தெரியவில்லை. இந்திய அரசாங்கம், சிறிலங்கா அரசாங்கத்திற்கு 13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்தும் படி மிக தெளிவாக கூறியுள்ளது.
13 தொடர்பில் இதுவரை முடிவு இல்லை
தமிழ் மக்கள் சார்பாகவும் பல கட்சிகளும் எவ்வாறு 13 ஆவது திருத்தச்சட்டம் கொண்டு வரப்பட்டதோ அதில் உள்ள அனைத்து விடயங்களையும் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் என கோரியிருக்கின்றார்கள். அத்துடன் ஈ.பி.ஆர்.எல்.எவ் மத்தியகுழுவிலும் 13ஐ முழுமையாக மிக விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்ற தீர்மானத்தினையும் எடுத்துள்ளோம்.
குறைந்த பட்சம் வடக்கு கிழக்கு மாகாணசபைக்கான தேர்தலையாவது அரசாங்கம் உடன் நடத்த வேண்டும் எனவும் கோருவதாக அந்த தீர்மானத்தினை எடுத்துள்ளோம். அடுத்து வெடுக்குநாறிமலை, குறுந்தூர்மலை, கன்னியா வெந்நீர் ஊற்றுப்பகுதிகளான தமிழ் மக்களின் புராதன சின்னங்கள் இன்று பறிக்கப்பட்டு, வெடுக்குநாறி மலையில் உள்ள விக்கிரகங்கள் உடைத்து எறியப்பட்டுள்ளதுடன் குறுந்தூர் மலையில் புத்த விகாரை கட்டப்பட்டுள்ளது. கன்னியா தமிழர்களிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மட்டக்களப்பில் உள்ள தமிழ் மக்களுக்கான மேய்ச்சல் தரையில் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள். ஆகவே இவை அனைத்தும் அரசாங்கத்தால் உடனடியாக நிறுத்தப்பட்டு அனைத்தும் இந்து தமிழ் மக்களின் புராதன இடங்கள் அந்த மக்கள் தொடர்ந்தும் வழிபடக்கூடியவாறாக உருவாக்கப்பட வேண்டும்.
தமிழர் இடங்களில் சிங்கள குடியேற்றம்
சிறிலங்கா அரசாங்கம் இதனை தொல்பொருள் பகுதியாக எடுக்குமாக இருந்தால் அதனை புராதன சின்னமாக பாதுகாக்க வேண்டுமே தவிர அங்கு புத்த விகாரைகள் வருவதோ சிங்கள மக்கள் குடியேற்றப்படுவதோ ஏற்புடையதல்ல. அரசாங்கம் இந்த விடயங்களில் கவனம் செலுத்தி மீண்டும் தமிழ் மக்களிடம் இந்த ஸ்தாபனங்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.
அரசாங்கம் வெளிநாடுகளுக்கும் தூதுவராலயங்களுக்கும் தாம் நல்லிணக்க செயற்பாடுகளை செய்துகொண்டிருக்கின்றோம் என கூறும் அதேவேளை நல்லிணக்கத்திற்கு எதிரான வகையில் சிறிலங்கா அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. அது தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடாகவே இருக்கின்றது எனவும் மத்தியகுழுவில் கூட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆகவே அரசாங்கம் வெளிநாடுகளுக்கு ஒரு கதையையும் உள்நாட்டில் வேறு விதமாக செயற்படுவதையும் ஈழமக்கள் பரட்சிகர விடுதலை முன்னணியின் மத்தியகுழு கண்டிப்பதோடு வெடுக்குநாறி, குறுந்தூர்மலை, கன்னியா வெந்நீர் ஊற்று அனைத்தும் தமிழ் மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும். அதிபர் விரும்பினால் ஓர் இரவிலேயே அனைத்தையும் நடைமுறைக்கு கொண்டு வர முடியும்.
ரணிலின் உடனடி முடிவு அவசியம்
ஆகவே நாட்களை கடத்தாமல் அதிபர் அதற்கான முடிவுகளை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கையை முன்வைத்துள்ளோம். இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மேலும் தீவிரமாக முன்னெடுத்து சென்று அனைவரதும் ஒத்துழைப்புடன் அனைவரும் ஒன்றிணைந்து தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க கூடிய ஸ்தாபனமாக மாற்றுவது தொடர்பாகவும் கருத்துப்பரிமாற்றங்கள் மத்தியகுழுவில் இடம்பெற்றது.
சிறிலங்கா அரசாங்கம் பொருளாதார ரீதியில் பலவீனமடைந்துள்ள சூழ்நிலையில் நாம் வெளிநாடுகளின் உதவியுடன் தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக அனைவரும் ஒன்றிணைந்து இவ்விடயங்களை முன்னெடுக்க வேண்டும் எனவும் கலந்துரையாடப்பட்டது” எனவும் தெரிவித்துள்ளார்.
