பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளாத இலங்கை: எச்சரிக்கும் மத்திய வங்கியின் ஆளுநர்
பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு முற்றாக மீளவில்லை என்பதால் நாடு தற்போது சென்று கொண்டிருக்கும் பாதையில் இருந்து விலகுவதற்கு இடமில்லை என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க( Nandalal Weerasinghe) தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்ட மற்றும் திட்டமிடப்பட்ட முக்கியமான சீர்திருத்தங்களை மாற்றியமைப்பது பொருளாதாரத்தை மீண்டும் சரிவு நிலைக்கு தள்ளும் என மத்திய வங்கி ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பிலுள்ள மத்திய வங்கியின் தலைமையகத்தில் நேற்று (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதாரம்
சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கையில் அரசாங்கம் முன்வைக்கும் வேலைத்திட்டம் அதே திசையில் சென்றால், நிறுவப்பட்ட பொருளாதார ஸ்திரத்தன்மை நிரந்தர ஸ்திரத்தன்மையாக மாற்ற முடியும்.
அதற்கு, மத்திய வங்கியின் கொள்கைகள், IMF இன் நிதிக் கொள்கைகள், இந்த திட்டத்தின் கீழ் அரசாங்கம் கட்டுப்படுத்தும் பொருளாதார சீர்திருத்தங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும், நிலையான பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதற்கு திட்டத்தின் அதே திசையில் நகர்வது மிகவும் முக்கியமானது என்றும் மத்திய வங்கி தனது வருடாந்த பொருளாதார வர்ணனையில் தெரிவித்துள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்தார்.
கொள்கை மாற்றத்தால் பொருளாதாரம் ஸ்திரமற்ற நிலைக்குத் திரும்பும் என்பதால், அதனால் ஏற்படும் பொருளாதார பின்னடைவைத் தவிர்ப்பதற்கு பரந்த அரசியல் மற்றும் சமூக ஒருமித்த அடிப்படையில் பொருளாதார சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவது மிகவும் முக்கியமானது என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |