தமிழரை ஆளத் தடுத்தீர்கள்… சிங்களவரும் வாழ முடியாது போகிறதே….!
இலங்கையின் பொருளாதார நிலைமை சீருக்கு வந்துவிட்டதா? அல்லது இன்னமும் மோசமாகிக் கொண்டிருக்கிறதா? அண்மைய நாட்களிலும்கூட எரிபொருளின் விலை அதிகரிப்பு செய்யப்பட்டது.
கடந்த காலத்தில் முன்னாள் அதிபர் கோத்தபாய ராஜபக்சவின் ஆட்சியில் இருந்த அளவுக்கு எரிபொருளின் விலை அதிகரித்து நெருங்கிச் செல்வதைக் காண முடிகின்றது.
உணவுப் பொருட்களின் விலையின் அதிகரிப்பும் மீண்டும் கடுமையாக உயர்ந்து செல்கின்றது. இலங்கை தீவில் மக்கள் வாழ முடியாத நிலையை நோக்கி பொருளாதாரம் செல்கின்றது.
இன்றைய அதிபர் ரணில் விக்ரமசிங்க இலங்கைப் பொருளாதாரத்தை மீட்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நிலைமை கைமீறிச் செல்லுவதை அண்மைய நாட்களின் செயற்பாடுகள் உணர்த்துகின்றன.
கோத்தாவின் பொருளாதார நெருக்கடி
கடந்த 2019ஆம் ஆண்டில் இலங்கையின் அதிபராக கோத்தபாய ராஜபக்ச பொறுப்பெடுத்தார். இதனையடுத்து அவர் எடுத்த சில பொருளாதார முடிவுகளினாலும், கொரோனா பேரிடர் பொதுமுடக்கத்தினாலும் இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுவெடிப்பினாலும் இலங்கையில் காலம் காலமாக தொடர்கின்ற தமிழின அழிப்புக்கான இராணுவக் கட்டமைப்பை முன்னெடுத்தல் போன்ற காரணங்களினாலும் சிறிலங்காவின் பொருளாதாரம் பெரும் நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டது.
இதனால் பொருட்களின் விலை மிகவும் கடுமையான வகையில் அதிகரித்த மக்கள் பெரும் துன்பத்திற்கு தள்ளப்பட்டார்கள். அத்துடன் நாடு முழுவதும் பாரிய பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது.
எரிபொருள் தட்டுப்பாடு, சமையல் எரிவாயுத் தட்டுப்பாடு என்பன நாட்டில் பூதாகரமான பிரச்சினையாக மாறியது. அத்துடன் எரிபொருளின் விலை மற்றும் எரிவாயுவின் விலை ஏற்கனவே நடைமுறையில் இருந்த விலையைக் காட்டிலும் மூன்று, நான்கு மடங்கு என அதிகரித்தது.
அத்துடன் அடிப்படை உணவுத் தேவைப் பொருட்களின் விலையும் பாரிய அளவில் உயர்ந்தது. நூறு ரூபாய் விற்ற அரிசி முந்நூறு ரூபாவைக் கடந்தது. சீனி போன்ற பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டது.
பசியில் அழுத குழந்தைகளின் நாடு
சிறிலங்கா பசியில் அழுத குழந்தைகளின் நாடாகிற்று. மிகக் கடுமையான அளவில் பால்மாவின் விலை அதிகரித்தது. அத்துடன் பால்மாவுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது. பாணின் விலையும் கடுமையாக உயர்ந்தது.
இலங்கை முழுவதும் வரிசை யுகம் என்ற காலத்தை கடந்த நாட்களில் சந்திக்க நேரிட்டது. எரிபொருளுக்காக மிக நீண்ட வரிசையில் மக்கள் காத்துக் கிடந்தார்கள். எரிவாயுவுக்காக மிக நீண்ட வரிசைகளில் சிலிண்டர்களுடன் காத்திருந்த மக்களின் அவலம் என்பது சொல்லி மாளாதவையாக இருந்தது.
இதனால் சிறிலங்காவில் அரசுக்கு கடும் எதிர்ப்பு நிலை உருவானது. சிறிலங்காவின் அன்றைய அதிபர் கோத்தபாய ராஜபக்ச பெரும் எதிர்ப்பையும் விமர்சனங்களையும் சந்திக்கத் துவங்கினார். இதனால் சிறிலங்கா அரசுக்கு எதிரான போராட்டங்கள் தலைநகர் கொழும்பில் வெடித்தது.
அரச அதிபர் அலுவலகத்தின் முன்பாக தொடர்ச்சியாக பல நாட்கள் போராட்டம் நடந்த நிலையில், அரச அதிபரின் அலுவலகத்தை ஒரு நாள் முற்றுகையிடுகின்ற அளவுக்கு நிலைமை மாறியது.
சிறிலங்கா வரலாற்றில் அரச அதிபர் ஒருவரின் அலுவலகம் முற்றுகையிடப்பட்டடு அவர் நாட்டில் இருந்து துரத்தியடிக்கப்பட்ட நிகழ்வு முதன் முதலில் அரங்கேறியது.
அன்றைய அதிபர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் அன்றைய பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் உயிர்தப்பி ஓடுகின்ற காட்சிகள் அன்று இலங்கையில் அரங்கேறின.
காலில் மிதிப்பட்ட யுத்தவெற்றி
ஈழத் தமிழ் மக்களை 2009இல் முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்து யுத்த வெற்றி பெறப்பட்டது. ஒன்றரை லட்சம் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர்.
மிகவும் கொடூரமான முறையில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நிகழத்தப்பட்டது. பசியாலும் உணவுத் தடையாலும் கடுமையான போர் நடவடிக்கைகளினாலும் வன்புணர்வுகளாலும் போர்க்குற்றங்களாலும் நிகழ்த்தப்பட்ட முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையே ராஜபக்ச தரப்பினரின் மாபெரும் அரசியல் முதலீடு ஆனது.
அதனை வைத்தே சிறிலங்காவை பல ஆண்டுகள் மாறிமாறி ஆள்வதற்கு ராஜபக்ச குடும்பம் திட்டம் தீட்டியிருந்தது.
இந்த நிலையில் முள்ளிவாய்க்காலில் ஈழத் தமிழ் மக்கள் சந்தித்த பசியை, உணவின்மையின் கொடுமையை சிறிலங்கா பொருளாதார நெருக்கடியின் போது தென்னிலங்கை தேசம் சந்தித்தது.
இதுநாள் வரை போரின் கதாநாயகர்களாக கொண்டாப்பட்ட ராஜபக்சவினர் மீது தென்னிலங்கை மக்கள் கோவம் கொண்டு கொந்தளித்து எதிர்போராட்டங்களை முன்னெடுக்க பசியும் பொருளாதார நெருக்கடியுமே காரணமானது.
நாயைப் போல புலிகளைக் கொன்றேன் என்றும் எனக்கு இன்னொரு முகம் இருக்கிறது என்றும் கோத்தபாய ராஜபக்ச வீரம் பேசியிருந்த நிலையில்தான் நாட்டை விட்டு உயிர்தப்பி ஓடினார்.
அப்போது அவர்களின் யுத்த வெற்றியை சிங்கள மக்கள் காலில் போட்டு மிதித்ததாகவே நாம் கொள்ள வேண்டும்.
நாட்டை விட்டு ஓடும் மக்கள்
கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நாட்டை விட்டு செல்லுகின்ற மக்களின் வீதம் அதிகரித்திருக்கிறது. இதனால் இன்றைய காலத்தில் குடியகல்வு, குடிவரவு திணைக்களத்தில் கடவுச்சீட்டுக்களை பெறுவதற்கான மக்களின் வரிசை நீண்டு காணப்படுகிறது.
அத்துடன் சிறிலங்காவில் உள்ள ஐரோப்பிய நாட்டுத் தூதரகங்களின் முன்னாலும் அரபு நாட்டுத் தூதரகங்களின் முன்னாலும் பெருமளவான மக்கள் வீசாவினைப் பெறுவதற்கும் காத்திருப்பதை காணமுடிகின்றது.
கனடியத் தூதரகத்தில் நாள் ஒன்றில் சுமார் ஐந்நூறுக்கும் அதிகமான விண்ணப்பங்கள் வீசாவிற்காக வருகை தருவதனை நேரடியாகக் காண முடிந்தது. பெருமளவான மக்கள் நாட்டை விட்டுப் புலம்பெயர்ந்து கொண்டுள்ளனர்.
ஒரு காலத்தில் ஈழத் தமிழ் மக்கள் போர் காரணமாக பெருமளவில் இடம்பெயர்ந்தார்கள். இன்று உலகம் முழுவதும் ஈழத் தமிழ் மக்கள் சிதறி வாழ்கின்றார்கள்.
போரினால் ஏற்பட்ட புலம்பெயர்வு, ஈழத் தமிழ் மக்களின் வாழ்விலும் வரலாற்றிலும் நெருக்கடிகளையும் மாற்றங்களையும் உண்டு பண்ணியது.
புலம்பெயர்வுத் துயரத்தையும் விடுதலைக்கான கருவியாக பாதையாக ஈழத் தமிழ் மக்கள் மாற்றியதனால் இன்று உலக நாடுகளில் பல்வேறு உயர்ந்த நிலைகளில் உள்ளனர்.
கனடா போன்ற நாட்டில் அமைச்சர்களாக ஈழத் தமிழர்கள் தாக்கம் செலுத்துகின்றனர். இந்த நிலையில ஈழத் தமிழ் மக்கள் தமது தாயகப் பிரதேசத்தில் தனிநாடு கோரி விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.
நிழல் அரசொன்றையும் ஸ்தாபித்தார்கள். ஆனால் மிகக் கடுமையான இனவழிப்புப் போரின் மூலம் போராளிகள் அழிக்கப்பட்டு அக்கட்டமைப்பும் வடக்கு கிழக்கில் துடைக்கப்பட்டது.
இந்த நிலையில் ஈழத் தமிழர்களை ஆழக்கூடாது என்று சிங்களப் பேரினவாதிகள் நினைத்தார்கள். ஆனால் இன்று சிங்கள மக்களும் வாழ முடியாத தீவாக இலங்கை மாறிவிட்டது.
வரலாற்றின் இந்தச் சாபத்தை முறியடிக்க வேண்டுமாக இருந்தால் ஈழத் தமிழர்களின் தேசத்தை அவர்களின் கையில் கொடுத்து சிறிலங்காவை மீட்பதே ஒற்றைத் தீர்வும் வழியுமாகும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |