இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ள தேர்தல் பிரசாரங்கள்!
இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான (Srilanka elections) தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் இன்று (18) நள்ளிரவுடன் நிறைவடைவுள்ளது.
இந்நிலையில் வேட்பாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
இதனை மீறி தேர்தல் சட்டத்துக்கு முரணாக செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க (Saman Sri Ratnayake) தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரச்சாரங்கள்
அது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கடந்த ஒகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி வேட்புமனுக்கள் பொறுப்பேற்கப்பட்டது.
ஜனாதிபதி தேர்தலில் 39 பேர் போட்டியிடுகின்றனர். பிரச்சார நடவடிக்கைகளுக்கு 34 நாட்கள் வழங்கப்பட்டன.
தேர்தல் பிரச்சாரங்களுக்கு அனைத்து வேட்பாளர்களுக்கும் சமவுரிமை வழங்குமாறு வலியுறுத்தி ஊடக நெறி கோவையை வெளியிட்டோம். ஒருசில ஊடகங்களின் செயற்பாடுகள் அதிருப்தியளிக்கின்றன.
காலவகாசம்
தேர்தல் பிரச்சாரங்களுக்காக வழங்கப்பட்ட காலவகாசம் இன்று நள்ளிரவுடன் நிறைவடையும்.
வேட்பாளர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
தனிப்பட்ட கருத்தை பகிர்வதாக குறிப்பிட்டுக் கொண்டு சிவில் பிரஜைகள் சமூக வலைத்தளங்களில் ஒரு வேட்பாளருக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ கருத்துக்களை பதிவேற்றம் செய்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
சுதந்திரமாகவும், நியாயமானதாகவும் தேர்தலை நடத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” என பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளார்.
விசேட போக்குவரத்து
இதற்கமைய, பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க, நாமல் ராஜபக்ச, திலித் ஜயவீர, நுவன் போககே ஆகியோரின் மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதனால் கொழும்பு நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, விசேட போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |