உயிர் நீத்த உறவுகளை நினைவு கூரும் வகையில் வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி!
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூரும் முகமாக இன்று திருகோணமலை சிவன் கோவிலுக்கு முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது.
இறுதி யுத்தத்தின் போது பொதுமக்கள் உணவாக உட்கொண்ட உப்பில்லாத கஞ்சியை நினைவுபடுத்தும் வகையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து இந்த செயற்பாட்டை முன்னெடுத்துள்ளனர்.
தொடரும் ஆக்கிரமிப்பு
அவ்வீதியூடாக பயணித்தவர்களுக்கும் சிரட்டைகளில் கஞ்சி பகிர்ந்தளிக்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தலைவர் அ.விஜயகுமார்,
“சிறிலங்கா அரசு யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழ் மக்களது நிலங்கள் மீதான ஆக்கிரமிப்பினை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறது.
அதுமட்டுமன்றி, யுத்தத்திற்கு அடுத்தபடியாக தமிழர் நிலங்களில் விகாரை மற்றும் புத்தர் சிலைகளை நிறுவி அதன் மூலமான அடக்குமுறைகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன. இதனை உடன் நிறுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவிடம், தொண்டைமனாறு, வடமராட்சி, நாவற்குழி என பல்வேறு பகுதிகளிலும் இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.
முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தில், இறுதி யுத்த படுகொலை நினைவாக, முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குமாறு யாழ். பல்கலைகழக மாணவர் ஒன்றியம் அனைத்து தரப்பிடமும் கோரிக்கை விடுத்துள்ளதுடன், மாணவர்களும் வடக்கு , கிழக்கு மாகாணங்களின் பல்வேறு பகுதிகளிலும் கஞ்சி வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.






