கடன் மறுசீரமைப்பு செயல்முறை பேச்சுவார்த்தை - அமெரிக்கா செல்லும் அலி சப்ரி
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அமெரிக்காவிற்கு நாளை (29) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இலங்கை வெளிவிவகார அமைச்சு இந்த செய்தியை இன்று (28) தனது உத்தியோக பூர்வ இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
மேலும், குறித்த விஜயத்தின் போது, அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கன் மற்றும் பல உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி

அலி சப்ரி மற்றும் அமெரிக்க அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பின் போது இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் கடன் மறுசீரமைப்பு செயல்முறை முக்கிய நிகழ்ச்சி நிரலாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு, கடந்த ஜூன் மாதம் முதல் தற்போது வரை, கடன் உதவி மற்றும் நேரடி உதவி உட்பட சுமார் 179 மில்லியன் அமெரிக்க டொலரை அமெரிக்கா வழங்கியுள்ளதுடன், சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்திற்கு தமது ஆதரவையும் வழங்கி வருகிறது.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் அமெரிக்க விஜயத்தின் போது சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவுடன் கலந்துரையாடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 26ம் திகதி பங்களாதேஷுக்கான விஜயம் மேற்கொண்டதன் பின்னர், வெளிவிவகார அமைச்சர் இவ்வாறு அமெரிக்கா செல்லவுள்ளார்.