தோல்வியடைந்த நிதி அமைச்சரை உடனடியாக பதவி நீக்க வேண்டும்!
நாட்டை பிரச்சினைக்குள் தள்ளிய நிதியமைச்சரை முதலில் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
நிதியமைச்சர் தோல்வியடைந்து விட்டார். அதனை மூடி மறைக்க தற்போது விளையாட்டு ஒன்றை ஆட முயற்சித்து வருகின்றனர் எனவும் அக்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
நேற்றைய தினம் அரசாங்கம் மேற்கொண்ட அவசர அமைச்சரவை மறுசீரமைப்பு தொடர்பாக, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
நாடு கடும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் அமைச்சர்களை பதவி நீக்கம் செய்து, அரசியல் நாடகங்களை காண்பிப்பத்தில் அர்த்தமில்லை.
நாடு தற்பொழுது பெரும் நெருக்கடிக்குள் வீழ்ந்துள்ளது. மக்கள் மணிக்கணக்கில் வரிசைகளில் நிற்கின்றனர்.எரிபொருள், எரிவாயு, மின்சாரம் என்பன இல்லை. இன்னும் சிறிது நாளில் உண்ணவும் உணவு கிடைக்காமல் போகலாம்.
நிதியமைச்சர் தனது சகாக்களை பயன்படுத்தி இவை தனது செயல்கள் அல்ல என காட்ட முயற்சித்து வருகிறார் என்பதோடு, அனைத்து பிரச்சினைகளையும் மூடி மறைக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகளே இவை எனவும் கடுமையாக சாடியுள்ளார்.
