தமிழர் தாயகத்தை நிர்மூலமாக்கியதற்குப் பெயர்தான் அபிவிருத்தியா..! சுரேஷ் பிரேமச்சந்திரன் சாடல்
தமிழர் தாயகத்தை நிர்மூலமாக்கியதற்குப் பெயர்தான் அபிவிருத்தியா என ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் க. பிரேமச்சந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
அண்மையில் போக்குவரத்து அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான பந்துல குணவர்தன இந்தியா வழங்கிய சில பேருந்துகளை இலங்கைப் போக்குவரத்துச் சபையின் யாழ்ப்பாணக் கிளைக்கு கையளிப்பதற்காகவும் இந்திய கடனுதவியின் கீழ் புனரமைக்கப்பட்ட அனுராதபுரம் - ஓமந்தை புகையிரத பாதையில் தொடருந்தை வெள்ளோட்டம் பார்ப்பதற்காகவும் யாழ்ப்பாணம் வந்திருந்தார்.
அங்கு அவர் உரையாற்றுகையில், “இலங்கை பெறுகின்ற பல்வேறு கடன் திட்டங்களில் மிகப்பெரும் பகுதி வடக்கு-கிழக்கிற்கே செலவழிக்கப்படுகிறது” என்று கூறியிருந்தார்.
அமைச்சரின் மேற்படி கூற்றுக்கு பதிலளிக்கும் வகையில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் க. பிரேமச்சந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு கேள்வியெழுப்பியுள்ளார்.
உண்மையை உணர்வது அவசியம்
அறிக்கையின் முழுவிபரம் வருமாறு, “வீதிகள் புனரமைப்பு, மின்சார வசதி, தொலைத்தொடர்புகள், தொடருந்து சேவை போன்ற பல பணிகளுக்காக இத்தகைய கடன் உதவிகள் செலவு செய்யப்பட்டதாக அமைச்சர் கூறியுள்ளார். அமைச்சர் பந்துல குணவர்த்தன அவர்கள் உண்மையை உணர்ந்துகொண்டு பேசுவது நல்லது.
இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிட்ட யுத்தத்திற்கு முன்பாக, வடக்கு-கிழக்கில் மின்சாரம் இருந்தது. தொலைத்தொடர்பு சேவைகள் இருந்தன. புகையிரத போக்குவரத்து இருந்தது. குறைகள் இருந்தபோதும் பல்வேறுபட்ட உட்கட்டமைப்பு வசதிகள் இருந்தன.
யுத்தத்தின்பொழுது புகையிரத தண்டவாளங்களும் சிலிப்பர் கட்டைகளும் இராணுவத்தினரால் பிடிங்கி எடுக்கப்பட்டு நூற்றுக்கணக்கான பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டன.
இவற்றிற்கு மேலதிகமாக ஆயிரக்கணக்கான பனை, தென்னை மரங்கள் தறிக்கப்பட்டு அவையும் இதே தேவைகளுக்காக இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டது.
தென்பகுதியிலிருந்து வடக்குக் கிடைத்த மின்சாரம் அரசாங்கத்தினால் துண்டிக்கப்பட்டது. தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. வடக்கு-கிழக்கில் இருந்த தொழிற்சாலைகளும் நெல் களஞ்சியப்படுத்தும் இடங்களும் அரிசி ஆலைகளும் நிர்மூலமாக்கப்பட்டன.
மருத்துவ தேவைகளுக்குப் பற்றாக்குறைகள் ஏற்படுத்தப்பட்டது. வடக்கிற்கு எரிபொருட்கள் தடைசெய்யப்பட்டிருந்தன.
மொத்தத்தில் இலங்கை இராணுவத்தினராலும் விமானப்படையினராலும் ஒட்டுமொத்தமான கட்டுமானங்களும் நிர்மூலமாக்கப்பட்டு தமிழ் மக்கள் மெழுகுதிரி வெளிச்சத்திலேயே தமது அன்றாட வாழ்க்கையை நடாத்த வேண்டிய நிலை ஏற்படுத்தப்பட்டிருந்தது.
இலங்கையின் அபிவிருத்திக்கான கடனுதவிகள்
இவை ஒருபுறமிருக்க, பல்லாயிரம் கோடிரூபாய் பெறுமதியான இராணுவத் தளபாடங்கள், குண்டுவீச்சு விமானங்கள், பீரங்கிகள், கவச வாகனங்கள், கடற்படைக்கான கப்பல்கள் என்பவற்றைக் கொள்வனவு செய்வதற்காக கடந்த முப்பது ஆண்டுகளாக பல பில்லியன் டொலர்கள் கடன் உதவி உலகின் பல நாடுகளிலிருந்தும் பெற்றுக்கொள்ளப்பட்டது.
உள்நாட்டில் பேசித் தீர்க்க வேண்டிய ஒரு விடயத்தை, யுத்தமாகப் பிரகடனப்படுத்தி, போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம் என்று ஜே.ஆர். ஜெயவர்த்தனவினால் ஆரம்பிக்கப்பட்ட யுத்தமானது அவரது வழித்தோன்றலான ரணசிங்க பிரேமதாச அவருக்குப் பின்னர் சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க அவரது வழித்தோன்றலான மகிந்த ராஜபக்ச ஆகியோர் காலத்திலும் இந்த யுத்தம் தொடர்ந்தது.
இந்தக் காலக்கட்டத்தில் சில ஆயிரங்களாக இருந்த பாதுகாப்புத் தரப்பினர் பல இலட்சங்களாக உயர்த்தப்பட்டனர்.
இலங்கையின் உள்நாட்டு வருமானத்தின் மிகப்பெரும்பகுதி யுத்தத்திற்கே செலவு செய்யப்பட்டது.
இதற்கு மேலதிகமாக வாங்கப்பட்ட கடன்களும் இதற்காகவே செலவு செய்யப்பட்டது.
இவை மட்டுமன்றி, வடக்குக்கு மகாவலிநீரை அனுப்புகிறோம் என்ற பெயரில் வெளிநாடுகளிலிருந்து கடன் பெறப்பட்டு தமிழர்களின் காணிகள் பறிக்கப்பட்டு அங்கு சிங்கள குடியேற்றங்களும் நடந்தேறின.
அதன் பிரகாரம் உருவாகியதுதான் வெலிஓயா என்று தற்பொழுது பெயர்மாற்றம் பெற்றுள்ள மகாவலி ‘எல்’ வலயமாகும்.
மொத்தத்தில் வடக்கு-கிழக்கில் இருந்த உட்கட்டுமான வசதிகளை அழித்தொழிப்பதற்கும் தமிழ் மக்களின் பொருளாதாரத்தையும் வாழ்வாதாரத்தையும் துவம்சம் செய்வதற்கும் அந்தப் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதற்காகவுமே இந்தக் கடனுதவிகள் பயன்படுத்தப்பட்டனவே தவிர, தமிழ் மக்களின் அபிவிருத்திக்காக அல்ல என்பதை அமைச்சருக்கு நினைவூட்டுகிறோம்.
யுத்தத்திற்குப் பின்னர், ஒட்டுமொத்தமான இலங்கையின் அபிவிருத்திக்கு கடனுதவிகள் தேவைப்பட்டது. அதற்கும் வடக்கு-கிழக்கைப் புனர்நிர்மானம் செய்கின்றோம் என்ற பெயரிலேயே கடனுதவிகள் பெறப்பட்டது. இதில் கடந்த கால ஆட்சியாளர்களால் அழித்தொழிக்கப்பட்ட உட்கட்டுமானங்கள் சிலவற்றைப் புனரமைத்தார்கள் என்பது உண்மை.
ஆனால் யுத்தகாலத்தில் வடக்கு-கிழக்கில் இலட்சக்கணக்கான வீடுகள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. பாடசாலைகள் தகர்க்கப்பட்டிருந்தது. விளைச்சல் நிலங்கள் பயிர்செய்ய முடியாத அளவிற்கு காடுகளாக வனாந்திரமாக மாற்றமடைந்திருந்தது. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருந்தது.
அவ்வாறு அவர்களது கட்டுப்பாட்டிற்குள் இருந்த வீடுகளின் கூரைகள், ஜன்னல்கள், கதவுகள், நிலைகள் என்பன களவாடப்பட்டிருந்தது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான எத்தகைய பிரத்தியேகச் செலவுகளையும் செய்வதற்கு இலங்கை அரசாங்கம் தயாராக இருக்கவில்லை.
இந்திய அரசாங்கம் மனமுவந்து ஐம்பதாயிரம் வீடுகளை அன்பளிப்பாக வழங்கியது. பாடசாலைகளைத் திருத்தி கல்விக்கூடங்களாக மாற்றிக்கொடுத்தது.
இந்தியக் கடன் உதவியின்கீழ் காங்கேசன்துறையிலிருந்து வவுனியா வரையில் புகையிரத பாதையை புதிதாக நிர்மாணிக்கப்பட்டது.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் பல்வேறு நிவாரணங்களையும் உதவிகளையும் எதிர்பார்த்திருந்த நிலையில், அவற்றுக்கான ஒதுக்கீடுகள் ஏதுமின்றி, வடக்கு-கிழக்கில் இராணுவத்தினர் புதிய புதிய கட்டளைத் தலைமையகங்களைக் கட்டவும் புதிய புதிய இராணுவ கட்டுமானங்களுக்காகவும் பல ஆயிரம் கோடிகளை ஒதுக்கியது.
யுத்தத்திற்குப் பின்னரும் வரவு-செலவுத் திட்டத்தில் முப்படையினருக்கான நிதி அதிகரிக்கப்பட்டே வந்தது.
பந்துலவின் கூற்று நகைப்புக்குரியது
இவை மாத்திரமல்லாமல், எத்தகைய வருமானமீட்டும் வாய்ப்புமற்ற, முன்னாள் அதிபர் மகிந்தராஜபக்சவின் தொகுதியான ஹம்பாந்தோட்டையை மையப்படுத்தி சர்வதேச விமான நிலையம், துறைமுகம், விளையாட்டு அரங்கம் என்பன பல்லாயிரம்கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டன.
இதில் இலாபமடைந்தது ராஜபக்ச குடும்பமும் அவர்களது விசுவாசிகளுமே தவிர, வேறு யாருமல்ல.
ஒருபுறம் வடக்கு-கிழக்கு யுத்தத்தால் அழிவுகளைச் சந்தித்தபோது, மறுபுறத்தில் அரசாங்கத்தில் ஆட்சி செய்தவர்கள் அதே யுத்தத்தைப் பயன்படுத்தி கோடீஸ்வரர்கள் ஆனார்கள்.
இவ்வாறு நாட்டின்மீது எவ்வித அக்கறையுமற்று யுத்தத்தில் நாட்டம்கொண்டு, சொந்த நாட்டையே சூறையாடி, தம்மை வளர்த்துக்கொண்டவர்கள் இன்று வடக்கு-கிழக்கு தமிழ் மக்களுக்காகவே கடன்தொகையின் பெரும்பகுதி செலவு செய்திருப்பதாகக் கூறுவது மிகவும் நகைப்புக்குரியது.
பொருளாதார ரீதியில் வீழ்ச்சி அடைந்திருக்கும் இலங்கையை மீளக்கட்டுமானம் செய்யத் தகுதியானவர் என்று தன்னைத்தானே பிரகடனப்படுத்திக்கொண்டிருக்கும் இன்றைய அதிபர், ரணில் விக்ரமசிங்கவும்கூட, வடக்கு-கிழக்கிற்கு அபிவிருத்திக்கு நிதியொதுக்குவது என்பதைவிட வடக்கு-கிழக்கில் ஆயிரம் புத்தகோயில் கட்டுவதற்கே நிதியை ஒதுக்கியிருந்தார்.
இந்த இலட்சணத்தில்தான் வடக்கு-கிழக்கின் அபிவிருத்தி இருக்கிறது என்பதை பந்துல குணவர்த்தன புரிந்துகொள்ள வேண்டும்.
தமிழ் மக்கள் உங்களது கடந்தகால செயல்களை மறந்துவிட்டனர் என்று நினைக்க வேண்டாம். குருந்தூர்மலை, மகாவலி ‘எல்’, ‘ஜெ‘ வலய செயற்பாடுகள் உங்களது கடந்தகால செயல்களை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துபவையாகவே உள்ளன.” என்றுள்ளது.