வெளிநாட்டில் தஞ்சமடைந்துள்ள கோட்டாபயவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறு மீண்டும் கோரிக்கை!
நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் அதிபருக்கு தமிழ் இனப்படுகொலையில் தொடர்பு இருப்பதாக போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கைச் சேர்ந்த தாய்மார்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அத்துடன் அவர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் ஒன்றை அனுப்பும் யோசனையையும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஐ.நா கூட்டத் தொடரில் மிச்சேல் பச்லெட்டின் விசேட அறிக்கை
இது தொடர்பில் வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகள், மனித உரிமை ஆர்வலர்கள், வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் மாவட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் வவுனியா நகரசபையில் வார இறுதியில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானம் மேற்கொண்டுள்ளனர்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அமர்வு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி முதல் சுமார் ஒரு மாத காலத்திற்கு ஜெனீவாவில் நடைபெறவுள்ளது.
இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான பரிந்துரைகளுடன் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட்டின் விசேட அறிக்கையும் அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனப்படுகொலையில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்
இதேவேளை தமிழ் இனப்படுகொலையில் ஈடுபட்ட கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட தரப்பினர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி ஆனந்த நடராஜா ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 51ஆவது கூட்டத்தொடரில், கட்சிகள் தமது முன்மொழிவுகள் அடங்கிய இரண்டு கடிதங்களை சமர்ப்பிக்க தீர்மானித்துள்ளன.
தமிழ் மக்களை படுகொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்டோரை சர்வதேச இராணுவ நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி தமிழ் மக்களுக்கு நீதி கோரும் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்படும் என லீலாதேவி ஆனந்த நடராஜா மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழர் பூர்வீக பிரதேசத்தில் உள்ள விகாரைகளை அகற்ற நடவடிக்கை
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு தமிழர்கள் எதிர்நோக்கும் ஆறு பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க தலையிடுமாறு கோரி இரண்டாவது கடிதத்தை அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு, கிழக்கில் இராணுவம் பலவந்தமாக ஆக்கிரமித்துள்ள தனியார் காணிகளை விடுவித்தல், அரசியல் கைதிகளை விடுவித்தல், பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட அவர்களது உறவினர்களின் தலைவிதியை வெளிப்படுத்துதல், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு காண வாக்கெடுப்பு நடத்துதல், தமிழர்கள் பாரம்பரியமாக வாழும் பிரதேசங்களில், பௌத்த விகாரைகளை அகற்றுவதற்கும், மக்களின் வாழ்வில் இடையூறு விளைவிக்கும் வகையில் வடக்கில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தை அகற்றுவதற்கும் தலையிடுமாறு கோரி கடிதம் அனுப்பவுள்ளதாகவும் லீலாவதி ஆனந்த நடராஜா மேலும் தெரிவித்துள்ளார்.
