கோட்டாபயவை நிராகரிக்கும் உலக நாடுகள் - பல வழிமுறைகளை கையாளும் ரணில்!
கோட்டாபய ராஜபக்ச சிறிலங்கா அதிபர் பதவியில் இருந்து விலகி ஒரு மாதம் நிறைவடையவுள்ள நிலையில், அவருக்கு உலகில் எந்த நாடும் அரசியல் புகலிடம் வழங்க இதுவரை முன்வரவில்லை என தெரியவருகிறது.
இவ்வாறான நிலையில், தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க, கோட்டாபய ராஜபக்சவை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வர பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருவதாக தென்னிலங்கை இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவாலும் நிராகரிக்கப்பட்ட கோட்டாபய
கோட்டாபய ராஜபக்ச குடியுரிமை பெற்றிருந்த அமெரிக்கா கூட அவருக்கு புகலிடம் வழங்கவில்லை.
தற்போது சிங்கப்பூரில் தங்கியிருக்கும் கோட்டாபய அங்கு மேலும் 14 நாட்கள் தங்கியிருக்க விசா அனுமதி கோரியிருந்தார்.
இந்த கோரிக்கையின் அடிப்படையில் சிங்கப்பூர் அரசாங்கம், அவரது விசா அனுமதி காலத்தை நீடித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
நாட்டை விட்டு தப்பிச் சென்ற கோட்டாபய
சிறிலங்காவில் கடந்த ஜூலை 9 ஆம் திகதி நடந்த போராட்டத்தின் பின்னர் கோட்டாபய ராஜபக்ச நாட்டில் இருந்து தப்பிச் சென்றார்.
முதலில் மாலைதீவு சென்ற அவர், அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார். சிங்கப்பூரில் இருந்து அவர் தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்பி வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
