தென்னிலங்கையில் துருவங்களுக்கிடையில் இடம்பெறும் இரகசிய சந்திப்புகள்!
சிறிலங்கா சுதந்திர கட்சியின் முக்கிய பிரமுகரும், ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தருக்கும் இடையில் இரகசிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றதாக தென்னிலங்கை வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கசிந்துள்ளன.
இருப்பினும் இந்த சந்திப்பு இடம்பெறவே இல்லை என சுதந்திர கட்சியின் முக்கியஸ்தர் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்.
எதிர்வரும் தேர்தல்களை இலக்காக வைத்தே இவர்களின் சந்திப்புகள் இடம்பெற்றதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
இரகசிய சந்திப்பு
இவ்வாறு இரகசிய சந்திப்பில் ஈடுபட்டவர்கள் வேறு யாருமல்ல சுதந்திர கட்சியின் பொது செயலாளர் தயாசிறி ஜயசேகரவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுமே.
இந்த இருவரின் இரகசிய சந்திப்பு அம்பலமானதிலிருந்து தற்போது இவர்களே தென்னிலங்கை அரசயிலின் பேசுபொருளாக வலம் வந்துகொண்டிருக்கின்றனர்.
இவர்கள் இருவருக்கிடையிலான சந்திப்பு, சஜித்தின் கொழும்பில் உள்ள இல்லதிலேயே இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரிமாறப்பட்ட வாக்குறுதிகள்
இந்த சந்திப்பில் சஜித்திற்கு தயாசிறி பல வாக்குறுதிகளையும் வழங்கியமை தொடர்பிலும் தகவல்கள் கசிந்துள்ளன.
அந்த வாக்குறுதிகளில் பிரதானமாக பார்க்கப்படுவது, தற்போது அங்கம் வகிக்கும் சுதந்திர கட்சியிலிருந்து தயாசிறி விலகி, எதிர்காலத்தில் சஜித்திற்கு முற்றமுழுதாக ஆதரவு வழங்குவது தொடர்பிலான பேச்சு தான், எனவும் தகவல் கசிந்துள்ளது.
மேலும் எதிர்வரும் அதிபர் அல்லது நாடாளுமன்ற தேர்தலை இலக்கு வைத்து சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்குவது தொடர்பிலும் இதன்போது பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மறுதலிப்பு
இந்த சந்திப்பை மிக இரகசியமாக நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், தற்போது அது பற்றிய அனைத்து தகவல்களும் வெளியாகியுள்ளதால் இரு தரப்பினரும் கவலையடைந்துள்ளதாகவும் தென்னிலங்கை அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறான நிலையிலேயே, சஜித் பிரேமதாசவை தான் சந்திக்கவில்லை என தயாசிறி ஜயசேகர கருத்துக்களை அடுக்கி விட்டுக்கொண்டிருக்கின்றார். தனது நண்பரை சந்திக்கச் சென்றதை அடிப்படையாக வைத்து சிலர் இந்த பொய்யான பிரசாரத்தை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்து வருகின்றார்.
எவ்வாறான மறுதலிப்புக்கள் வெளியானாலும் இருவருக்கிடையிலான இரகசியமானதும், விசேடமானதுமா இந்த சந்திப்பு மிக அண்மையிலேயே நடந்தது என தென்னிலங்கை அரசியல் வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கசிந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
