மீண்டும் டொலருக்கு திண்டாடும் சிறிலங்கா - பல வாரங்களாக கடலில் காத்திருக்கும் கப்பல்கள்!
சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு காரணமாக கடலில் நங்கூரமிடப்பட்டுள்ள எரிபொருள் கப்பல்களுக்கான கட்டணம் இதுவரை செலுத்தப்படவில்லை என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
கொழும்பு துறைமுகத்தில் சுமார் 3 வாரங்களாக மசகு எண்ணெய் கப்பலொன்று நங்கூரமிடப்பட்டுள்ள போதிலும், இதுவரை அந்த கப்பலுக்கான கட்டணம் செலுத்தப்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகிறது.
அதனை தவிர மேலும் இரண்டு டீசல் கப்பல்களும் ஒரு வாரத்திற்கு மேலாக கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளன.
டொலர் பெற்றுக்கொள்வதற்கான கலந்துரையாடல்
இந்த நிலையில், கப்பல்களுக்கான கட்டணங்களை செலுத்துவதற்குரிய டொலரை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை மத்திய வங்கியுடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக சிறிலங்கா எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, எரிவாயு கொள்வனவுக்காக உலக வங்கி வழங்கிய நிதி, மோசடி செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தியை லிட்ரோ நிறுவனம் மறுத்துள்ளது.
உலக வங்கியின் நிதியுதவியை பெற்றுக்கொள்வதில் ஏற்படவுள்ள தடை
குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக பொறுப்பான தரப்பினர் குறிப்பிடும் பொய்யான கருத்துக்கள் கவலைக்குரியதாக உள்ளதுடன், எதிர்வரும் காலங்களில் உலக வங்கியின் நிதியுதவியை பெற்றுக்கொள்வதற்கும் தடையாக கருதப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
உலக வங்கியின் நிதியுதவி வழங்கியதை தொடர்ந்து எரிவாயு விநியோகம் விரைவாக முன்னெடுக்கப்பட்டு, எரிவாயு தட்டுப்பாட்டுக்கு தீர்வு எட்டப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

