தென்னிந்திய பாடகர் ஸ்ரீநிவாஸ் யாழ். வருகை
யாழ்ப்பாணத்தில் (Jaffna) நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சியொன்றிற்காக பிரபல பாடகர் ஸ்ரீநிவாஸ் உள்ளிட்ட குழுவினர் இன்று (18) நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
பிரபல பாடகர் ஶ்ரீநிவாஸ் பங்குபெறும் இசை நிகழ்ச்சி யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் சனிக்கிழமை (19) மாலை ஆறு மணிக்கு நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக (University of Jaffna) மருத்துவ பீட மாணவர்களின் போக்குவரத்து வசதிகளுக்காக பேருந்து ஒன்றை கொள்வனவு செய்வதற்கான நிதியை திரட்டும் முகமாக குறித்த இசைநிகழ்ச்சி யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது.
மாணவர்களின் போக்குவரத்து வசதி
யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் கற்றல் பயிற்சிகளை மேற்கொள்வதற்காக யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள போதனா வைத்தியசாலை மற்றும் ஆதார வைத்தியசாலைகளுக்கு செல்வது குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் மருத்துவ பீட மாணவர்களின் போக்குவரத்து வசதிக்காக பேருந்து ஒன்று தேவை என்ற அடிப்படையில் அதனை கொள்வனவு செய்வதற்கு போதுமான நிதியை திரட்டுவதற்காக இசை நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் அனுமதிச் சீட்டு, நன்கொடை மற்றும் அனுசரணை மூலமும் நிதி திரட்டப்படவுள்ளது.
அனுமதிச் சீட்டு விற்பனை
25 ஆயிரம் தொடக்கம் 5 ஆயிரம் வரை பல்வேறு விலைகளில் இசை நிகழ்ச்சிக்கு அனுமதிச் சீட்டு விற்பனை செய்யப்படவுள்ளது.
இந்த நிகழ்வு ஒரு களியாட்ட நிகழ்வாக அல்லாமல் மருத்துவ பீட மாணவர்களையும் மருத்துவ சமூகத்தையும் மேம்படுத்தும் ஒரு நிகழ்வாக இது காணப்படும்.
அனைத்திலும் கிடைக்கும் வருமானமும் பேருந்து வாங்குவதற்காகவே செலவிடப்படும்.சமூகத்தில் உள்ள அனைவரும் இந்த முயற்சிக்கு ஒத்துழைக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறோம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

