பெட்ரோல் திருடும் போது பற்றிக்கொண்ட தீ! வசமாக சிக்கிய திருடன்
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவுக்குட்பட்ட விசுவமடு வள்ளுவர்புரம் கிராமத்தில் சிறுவன் ஒருவர், பெட்ரோல் திருடும் போது மோட்டார் சைக்கிள் தீ பற்றிக்கொண்டதில் வசமாக மாட்டிக்கொண்டுள்ளார்.
15 அகவையுடைய குறித்த சிறுவன் வள்ளுவர்புரம் கிராமத்தில் வீடுகளில் புகுந்து தண்ணீர் இறைக்கும் மோட்டர்கள், தென்னை மரங்களில் ஏறி தேங்காய்கள், வழிப்பறி உள்ளிட்ட கொள்ளைகளில் ஈடுபட்டு வந்துள்ள நிலையில், அண்மைய நாட்களாக வீடுகளில் நிற்கும் மோட்டார் சைக்கிள்களில் பெட்ரோல் திருடி வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இத்திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் இன்று கையும் களவுமாக பிடிபட்டுள்ளார்.
அதிகாலை வேளை வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிளில் பெட்ரோலினை திருட முற்பட்ட போது, இருட்டுக் காரணமாக வெளிச்சத்திற்காக தீப்பெட்டியை பற்ற வைத்துள்ளார். இதன்போது மோட்டார் சைக்கிள் தீப் பற்றிக்கொண்டுள்ளது.
பற்றியெரியும் சத்தம்கேட்டு வீட்டார் தீடீரென விழித்துப் பார்த்தபோது திருடன் தப்பியோடியுள்ளார்.
அயலவர்களை அழைத்து தீப் பற்றிக்கொண்ட மோட்டார் சைக்கிளின் தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதுடன், திருடன் அருகில் உள்ள பற்றைக்காட்டில் மறைந்திருந்த வேளை கிராமத்தவர்கள் ஒன்று திரண்டு திருடனை பிடித்து கட்டிவைத்து காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து புதுக்குடியிருப்பு காவல்துறையினர் திருடனை கைதுசெய்துள்ளதுடன், எரிந்து சேதமான மோட்டார் சைக்கிளையும் கொண்டுசென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறன்றனர்.
