கோட்டாபய வெளியிட்ட விசேட வர்த்தமானி- அமைச்சரவையில் மீண்டும் பவித்ரா!
சிறிலங்கா அமைச்சரவையில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பெண்கள், சிறுவர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக முன்னாள் அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி நியமிக்கப்படலாம் என அரசாங்கத்தின் தகவல்கள் கூறுகின்றன.
தொழில்நுட்பம், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் பெண்கள், சிறுவர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் ஆகிய புதிய அமைச்சுக்களை உருவாக்கி, அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச நேற்று அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார்.
அதேவேளை புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா நியமிக்கப்படலாம் எனவும் அரசாங்கத்தின் தகவல்கள் கூறுகின்றன.
தம்மிக்க பெரேரா பொதுஜன பெரமுனவின் அங்கத்துவதை பெற்றுக்கொண்டுள்ளதுடன் அவர் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் தம்மிக்க பெரேரா தனக்குரிய அனைத்து நிறுவனங்களின் பணிப்பாளர் சபை பதவிகளில் இருந்தும் விலக தீர்மானித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற பதவி வெற்றிடத்திற்கு தம்மிக்க பெரேராவின் பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் இராஜினாமாவால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கே தம்மிக்க பெரேரா இவ்வாறு நியமிக்கப்படவுள்ளார்.

