மண் வெட்டி, தகரத்திற்காக அரசியல்வாதிகள் பின்னால் சென்ற காலம் மாறி முதுகெலும்புள்ள இளைஞர்கள் உருவாகியிருப்பது மகிழ்ச்சியே!
சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பு காலிமுகத் திடலில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்திற்கு தான் சென்றாலும் மக்கள் தன்னை அங்கிருந்து வெளியேற்றி விடுவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
தனது முகநூல் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இதனை கூறியுள்ளார். மக்களின் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு அரசியல் தோற்றத்தை ஏற்படுத்தக் கூடாது என்பதால், தான் அதில் கலந்துக்கொள்ள போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் போராட்டக்கார்கள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்,
மேலும் தொழிலை பெற்றுக்கொள்ள அரசியல்வாதிகளின் பின்னால் சென்ற நாட்டுக்கு, நீங்கள் சுபமான கனவு. நாட்டை உருவாக்க போகும் போராட்டம் வெற்றி பெறட்டும். நான் அரசியல்வாதி. தொழில்சார் நிபுணர் என்ற வகையில் வெற்றியடைந்த பின்னர் நாடு தொடர்பான உணர்வு காரணமாக அரசியலுக்கு வந்தேன்.
என்றோ ஒரு நாள் இந்த நாட்டை கட்டியெழுப்ப எனது பங்களிப்பை வழங்க வேண்டும் என்பது எனது நோக்கம். நீயும் அந்த 225 பேரில் ஒருவன் தானே? என கேட்பதால், எமது இளைஞர்களின் போராட்டத்திற்கு வார்த்தைகளில் ஆதரவு வழங்குவதற்கு முன்னர் இதனை கூறினேன்.
அவர்கள் அப்படி கேட்டாலும் பரவாயில்லை. எனது கருத்தை வெளியிடுகிறேன். கட்சி, நிற பேதமின்றி நான் இந்த போராட்டத்தை மனதார ஆதரிக்கின்றேன். அதற்காக குரல் கொடுப்பேன். இந்த போராட்டத்திற்கு எந்த வகையிலும் அரசியல் தோற்றத்தை ஏற்படுத்தி விட கூடாது.
அரசியல் சாயம் பூசப்பட்டுள்ள நான் அந்த போராட்டத்திற்கு வர மாட்டேன். சென்றால், இளைஞர்கள் என்னை விரட்டியடிக்கலாம். அப்படியான பலம் இளம் தலைமுறையினருக்கு கிடைத்தது குறித்து நான் மகிழ்ச்சியடைகின்றேன்.
தொழில், மண் வெட்டி, தகரம் போன்றவற்றை பெற்றுக்கொள்ள ஆத்ம கௌரவத்தை காட்டிக்கொடுத்து அரசியல்வாதிகளின் பின்னால் செல்லும் மக்கள் இருந்த நாட்டில், இப்படியான முதுகெலும்புள்ள இளைஞர்கள் உருவாகி இருப்பது தொடர்பாக மகிழ்ச்சியடைகின்றேன்.
திறந்த மனதுடன் சிந்திக்கும், மத, இன, குல பேதங்களை கவனத்தில் கொள்ளாத, நாட்டை உண்மையான அன்புடன் நோக்கும் நீங்கள், இந்த நாட்டுக்கும் பலம். இது சுபமான கனவு. பிள்ளைகளே நீங்களே இந்த நாட்டை உருவாக்க போகிறீர்கள்.
உங்களது போராட்டம் வெற்றி பெறட்டும். இது எனது கருத்து. நான் அரசியல்வாதி, தேவை என்றால் என்னை திட்டுங்கள். பரவாயில்லை என ஹர்ச டி சில்வா தனது முகநூல் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளார்.
