இலங்கை அரசாங்கம் மீது பாரிய குற்றச்சாட்டு
இலங்கையின் மீன் வளம் அழிவடைதற்கு எக்ஸ் - பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்த வெளியேறிய இரசாயன கசிவு மாத்திரம் காரணமல்ல எனவும், மாறாக நாடு முழுவதும் உள்ள கடலுக்கு அரசாங்கத்தால் திருப்பி விடப்பட்ட கழிவுநீர் அமைப்பும் இதற்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் மீனவர் சங்கங்கங்களின் பிரதிநிதிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
களனி ஆறு மற்றும் முத்துராஜவல பிரதேசத்தில் கடலில் திருப்பி விடப்படும் கழிவு நீர் உள்ளிட்ட நாட்டில் உள்ள அனைத்து கழிவுநீர் அமைப்புகளும் கடலில் கலப்பதால் ஏற்படும் பிரச்சினைக்கு தீர்வு காண இலங்கை அரசாங்கம் தவறியுள்ளதாக, அகில இலங்கை மீனவர்கள் தொழிற்சங்க அமைப்பின் தலைவர் அருண ரொசாந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
ஊடகங்கள் குறிப்பிடுவது போல், எக்ஸ் - பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்து இரசாயன பொருள் கடலுக்குள் கலந்திருந்தால், உயிரிழந்த ஆயிரக்கணக்கான மீன்கள் நீர்கொழும்பு மற்றும் சிலாபம் கடற்கரைகளில் கரையொதுங்கியிருக்க வேண்டும். ஆமைகள் பெரும்பாலும் மீன்பிடி வலைகளில் சிக்கி உயிரிழக்கின்றன.
கடல் கொந்தளிப்பு காலத்திலும் ஆமைகள் கரையொதுங்கும். அவ்வாறு இல்லாமல், இராசாயனங்களால் ஆமைகள் உயிரிழப்பதாக தெரிவிக்கப்படும் கருத்தினை ஒரு மீனவனாக நான் நம்பவில்லை.
பேர்ள் கப்பலை விட அரசாங்கம் தான் கடலில் அதிக இரசாயனங்களை கலக்கச் செய்துள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.