ரணில் ஆட்சி மீது நம்பிக்கை இல்லை ! கவலை வெளியிட்டுள்ள மகா சங்கத்தினர்
இலங்கையின் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீட மகா சங்கத்தினர் தற்போது அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை முழுமையாக இழந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியுள்ளது.
இதனால், இலங்கையில் திட்டமிட்டபடி தேர்தல்கள் நடைபெறுமா என்ற சந்தேகம் அவர்களுக்கு எழுந்துள்ளதாக மகா சங்கத்தினருடனான சந்திப்பை தொடர்ந்து அந்த கட்சியின் மகளீர் அணி தலைவி ஹிருணிக்கா பிரேமசந்திர ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள்
இலங்கையில் இந்த ஆண்டு அதிபர் தேர்தல் நடத்தப்படுமென ரணில் விக்ரமசிங்க அறிவித்ததாக அவர் நினைவூட்டியுள்ளார்.
எனினும், சில நேரங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படுமெனவும் அவர் கருத்து வெளியிடுவதாக ஹிருணிக்கா பிரேமசந்திர கூறியுள்ளார்.
இவ்வாறாக ரணில் விக்ரமசிங்க மாற்று கருத்துக்களை வெளியிடுவது மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீட மகா சங்கத்தினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கவலை வெளியிட்டுள்ள மகா சங்கத்தினர்
இதனால் சிறிலங்கா அதிபர், அவரது தலைமையிலான அரசாங்கம் மற்றும் அதன் நடவடிக்கைகள் தொடர்பில் மகா சங்கத்தினருக்கு சந்தேகங்கள் எழுந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலை தொடர்பில் அரசாங்கம் கவலையடைய வேண்டுமென ஹிருணிக்கா பிரேமசந்திர குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் உள்ள அனைவரும் ஆசி பெற்றுக் கொள்ளக்கூடிய தலைமை பீடாதிபதிகள், நாட்டின் மீதும், தலைவர்கள் மீதும் ஏமாற்றம் அடைந்திருப்பது கவலைக்குரிய நிலை என அவர் மேலும் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |