சட்டப் போராட்டம் நடத்தத் தயார்! தமிழரசுக் கட்சிக்குள் எடுக்கப்பட்ட தீர்மானம்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு மற்றும் பொதுக்குழுக் கூட்டங்களுக்கு எதிராக வழக்குகளைத் தொடுத்துள்ள கட்சி உறுப்பினர்களிடம் வழக்குகளை வாபஸ் பெறக் கோருவது என்றும், நிபந்தனை இல்லாமல் வழக்குகளைக் கை வாங்க அவர்கள் இணங்காவிட்டால், தொடர்ந்து வழக்குகளை எதிர்கொள்வது என்றும் தமிழரசுக் கட்சியின் பிரமுகர்கள் முடிவெடுத்துள்ளனர்.
தமிழரசுக் கட்சியின் இதுவரை இயங்கிய மத்திய குழு உறுப்பினர்கள் இன்று கிளிநொச்சியில் தமக்குள் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
குறித்த கூட்டத்திலேயே தமிழரசுக் கட்சியின் பிரமுகர்கள் வழக்கை எதிர்கொண்டு நீதிமன்ற கட்டளைப்படி விடயங்களை முன்னெடுப்பது என முடிவெடுத்துள்ளனர்.
ஆலோசனைக் கூட்டம்
வழக்காளிகளுடன் பேசுவதற்கு இதுவரை கட்சியின் பதில் பொதுச் செயலாளராக இருந்த வைத்தியர் ப.சத்தியலிங்கம், முன்னாள் மட்டக்களப்பு மேயர் தி.சரவணபவன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலாதன் ஆகியோர் கொண்ட குழு இன்றைய கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் ஆகியோர் பங்குபற்றவில்லை, அவர்களுக்கு எதிராகக் காரசாரமான கருத்துக்கள் கூட்டத்தில் பங்குபற்றிய சிலரால் முன்வைக்கப்பட்டுள்ளன.
மேலும் வழக்குகளைச் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் சமரசமாக தீர்க்கும் கருத்தியல் இன்றைய கூட்டத்தில் பிரதிபலிக்கவில்லை.
அத்துடன் வழக்காளிகள் நிபந்தனையின்றி வழக்குகளைக் கை வாங்காவிட்டால் சட்டப் போராட்டம் நடத்தத் தயார் என்று உறுதியாக பேசப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |