மீண்டும் இணைத்துக் கொள்ளப்படும் அரச ஊழியர்கள் - வெளியாகியுள்ள அறிவிப்பு!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதனை, பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது தொகுதிக்கு வெளியே உள்ள இடங்களில் தற்காலிகமாக சேவையாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
நியமனங்கள்
இதேவேளை, குறித்த ஊழியர்களுக்குரிய சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜனக வக்கம்புர குறிப்பிட்டுள்ளார்.
அதே சமயம், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரச பணியாளர்கள் தொடர்பிலான அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை பிரதமர் சமர்ப்பித்துள்ளார்.
இதனடிப்படையில், இவர்களை பணி புரிந்த இடங்களுக்கு வெளியே மற்றும் அருகிலுள்ள இடங்களிற்கு மீள நியமிக்க தேர்தல்கள் ஆணைக்குழுவினால் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தேவையான அறிவுறுத்தல்கள் மாகாண ஆளுநர்கள் ஊடாக அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர மேலும் தெரிவித்துள்ளார்.