மாணவர்கள் மீதான தாக்குதல்! சிறிலங்கா அரசின் கோரமுகம் அம்பலம்: நிமால் விநாயகமூர்த்தி கண்டனம்
சிறிலங்காவின் சுதந்திரதினமன்று அறவழியில் போராடிய மாணவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள்மீது காவல்துறை மேற்கொண்டுள்ள அராஜகமான தாக்குதல் இலங்கை அரசின் கோரமுகத்தை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனடா உறுப்பினர் நிமால் விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
புலம்பெயர்தேசமாக கண்டனம்
“சிறிலங்காவின் சுதந்திரதினத்தை புறக்கணிக்கும் விதமாகவும் அந் நாளை கரிநாளாக பிரகடனப்படுத்தியும் அமைதி வழியில் பேரணி சென்ற அரசியல் தலைவர்கள், மாணவர்கள், மக்கள்மீது மிகவும் கொடூரமான முறையில் காவல்துறையினர் தாக்குதல் நடாத்தியுள்ளமை கண்டு புலம்பெயர் தேசமாக கடும் கண்டங்களை வெளியிடுகின்றோம்.
சிறிலங்கா அரசு ஒரு ஜனநாயக அரசென்றால், சிறிலங்கா நாடு ஒரு ஜனநாயக நாடென்றால் இப்படியான தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிராது.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்மீது கண்ணீர் குண்டு பிரயோகம் மேறகொண்டு, நீர்தாரை தாக்குதலையும் தொடுத்திருந்ததுடன், அவர்கள்மீது கடுமையான தாக்குதல்களையும் காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
மக்கள் பிரதிநிதிகள் மீதும் அராஜகம்
இதேவேளை இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்மீதும் தாக்குதல்கள் நடந்துள்ளன. அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் மற்றும் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
மக்கள் மீதும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மீதும் தாக்கி, தனது கோர முகத்தை சிறிலங்கா வெளிப்படுத்தியுள்ளது.
சுதந்திரதினத்தின் போது தமிழர்களுக்கு சுதந்திரம் இல்லை என்பதையும் அவர்கள் மீது அடக்குமுறையும் ஒடுக்குமுறையையும் மேற்கொண்டதன் வாயிலாகவும் இந் நாளை கரிநாள் ஆக்கியுள்ளது சிறிலங்கா அரசு.
இதனை பன்னாட்டு சமூகம் கண்டிப்பதுடன் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான நீதி குறித்தும் சிந்திக்க வேண்டும்.
பொருளாதார செலவு
இதேவேளை, சிறிலங்கா காவல்துறையினர் பெருமளவில் கிளிநொச்சியில் குவிக்கப்பட்டு, பாரிய அடக்குமுறை நிகழ்த்தப்பட்டுள்ளது.
இதுவே பாரிய பொருளாதார நெருக்கடியில் உள்ள சிறிலங்கா தமிழர்களை ஒடுக்குவதில் பாரிய மனித, பொருளாதார செலவுகளை செய்வதற்கும் இத்தாக்குதல் சிறந்த எடுத்துக்காட்டு.
எனவே சிறிலங்காவுக்கு பொருளாதார நன்மைகள் செய்யும் சர்வதேச நிறுவனங்களும் அரசுகளும் இதனைக் கருத்தில் கொண்டு தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி நிற்கின்றேன்” என்று அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |