சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை உருவாக்க நீதி அமைச்சரின் திட்டம்
“சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை கீழ் மட்டத்தில் இருந்து உயர் மட்டம் வரை ஏற்படுத்த வேண்டும். அதாவது கிராம மட்டத்தில் இருந்து மேற்கொள்ள வேண்டும். அதனால் நாங்கள் அனைத்து கிராம சேவகர் பிரிவும் உள்ளடங்கும் வகையில் நல்லிணக்க குழுக்களை அமைப்பதற்கு தற்போது ஆரம்பித்திருக்கிறோம்.”
இவ்வாறு, செப்டம்பர் 21ஆம் திகதி சர்வதேச சமாதான தினத்தையொட்டி நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச விடுத்திருந்த அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
கிராமிய சகவாழ்வு
“சமாதானம் அனைத்து மக்கள் பிரிவுக்கும் நாட்டுக்கும் மற்றும் முழு உலகுக்கும் மிகவும் தேவையான விடயம் என்பது நாங்கள் அனைவரும் அறிந்ததாகும்.
அதன் பிரகாரம், இதுவரை 14022 கிராம சேவகர் பிரிவுகளில் நல்லிணக்க குழுக்களை அமைத்திருக்கிறோம்.
சகவாழ்வை கிராம மட்டத்தில் அமைப்பதற்காக மதத் தலைவர்களுக்கு பாரிய பொறுப்புக்கள் இருக்கின்றன. குறிப்பாக எமது எதிர்கால சந்ததியினரை போதைப்பொருளுக்கு அடிமையாவதில் இருந்து தடுத்துக்கொள்வதற்கு நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதற்காக கிராமிய சகவாழ்வை மேற்கொள்ள வேண்டும். இன மற்றும் மதங்களுக்கிடையில் கிராமிய மட்டத்தில் சகவாழ்வை பாதிக்கக்கூடிய ஏதாவது சம்பவம் இடம்பெற்றால், அவ்வாறான சம்பவம் இடம்பெறாமல் இருப்பதற்கும் அது தொடர்பாக உயர்மட்ட ராஜதந்திரத்தை விரைவாக அறிவுறுத்தவும் முடியுமான வகையில் முறையொன்றை நல்லிணக்க குழு ஊடாக ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.
அதற்காக தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்துக்கான அலுவலகத்தை நியதிச்சட்ட நிறுவனமாக அமைப்போம். வரலாற்றில் எமது நாட்டில் பல சந்தர்ப்பங்களில் இரத்தக்களரி ஏற்பட்டிருக்கிறது.
1971, 1988இல் இந்த நாட்டில் பயங்கரவாதம் இருந்தது. மேலும், 30 வருட விடுதலைப்புலிகளின் பயங்கரவாதம் காரணமாக மக்கள் அழுத்தங்களை எதிர்கொண்டனர்.
எமது நாட்டில் அதிகாரத்தில் இருந்த அனைத்து அரசாங்கங்களும் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு தேவையான உண்மையான முயற்சியை மேற்கொண்டிருக்கவில்லை.
பின்னர் 2019இல் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் இடம்பெற்றது. இவற்றை தடுப்பதற்கு எமது நாட்டு தலைவர்களுக்கு வேலைத்திட்டம் ஒன்று இருக்கவில்லை. இந்த அனைத்து சம்பவங்களையும் தடுத்துக்கொள்ள எங்களுக்கு சந்தர்ப்பம் இருந்தது.
இவ்வாறு தெரிவித்து நாங்கள் கடந்தகாலம் தொடர்பில் கதைத்து பயன் இல்லை. எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவம் இடம்பெறாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இளைஞர் பரம்பரையினர் எமது நாட்டின் சக்தியாகும். அவர்களுக்கு பாதுகாப்பான நாடொன்றாக இந்த நாட்டை மாற்ற வேண்டும்.
பெளத்த, இந்து. இஸ்லாம் மற்றும் கத்தோலிக்க ஆகிய இந்த மதங்களில் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்துடன் செயற்பட வேண்டியதன் பெறுமதியை தெளிவாக குறிப்பிட்டிருக்கின்றன.
அதனால் அனைவரும் தங்களின் மதம் கற்றுத்தந்துள்ளதன் பிரகாரம் அமைதியான தேசம் ஒன்றை கட்டியெழுப்புவதற்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.” என்றார்.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)