சுகாதாரக் கட்டமைப்பிற்கு பாரிய சவால் - மருத்துவர் ரஞ்ஜித் பட்டுவன்துடாவ வெளியிட்ட தகவல்
இலங்கையில் தற்போது காணப்படும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தின் போக்கானது நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பிற்கு பாரிய சவாலாக மாறியுள்ளதாக சுகாதார அமைச்சின் விரிவாக்கல் பிரிவுப் பணிப்பாளர் மருத்துவர் ரஞ்ஜித் பட்டுவன்துடாவ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற கொரோனா தொற்றின் தற்போதைய நிலைமை பற்றி தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், டெல்டா வைரஸ்சின் நான்கு திரிபுகள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டாலும் இதுவரை அது குறித்து தமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என கூறியுள்ளார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர், டெல்டா தொற்றிலிருந்து பிறழ்வடைந்த மூன்று வகையான வைரஸ்சுகள் இருப்பதாக கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆய்வுகூடம் இறுதியாக எனக்கு அனுப்பிவைத்த அறிக்கையில் கூறியுள்ளது.
இருந்த போதிலும் கலாநிதி நீலிகா மலவிகேயை மேற்கோள்காட்டி ஊடகங்கள் வெளியிட்டுவரும் 04 வகையான பிறழ்வுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதென கூறப்படும் விடயம் பற்றி இதுவரை எனக்கு உத்தியோகப்பூர்வமாக குறித்த பல்கலைக்கழகத்திலிருந்து அறிக்கை வரவில்லை.
எனினும் கலாநிதி நீலிகா மலவிகேயின் ஆய்வுகூடம் தெரிவித்தால் அது உண்மையாகத்தான் இருக்கும்.
தற்போதைய நிலைமையில் இலங்கையின் சுகாதாரக் கட்டமைப்பும், மருத்துவமனைகளின் நிலைமையும் சவாலுக்கு உட்பட்டு வருகின்றன.
இப்படியான தொற்று பரவுமென முன்கூட்டிய ஏற்பாடுகள் எமக்கு இருக்காத காரணத்தினால் தொற்றாளர்களின் எண்ணிக்கை, மருத்துவமனை வசதி என்று பல பிரச்சினைகள் எழலாம் எனக் கூறியுள்ளளார்.