அமெரிக்காவால் ரஷ்யாவை புறக்கணித்த இலங்கை!! நாடாளுமன்றில் அம்பலத்துக்கு வந்த தகவல்
அமெரிக்காவுடன் கொண்டுள்ள அரசியல் சித்தாந்தத்தால் ரஷ்யா வழங்கிய நீண்ட கால கடன் வசதியை நாங்கள் புறக்கணித்துள்ளோம் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
குறைந்த விலையில் ரஷ்யாவிடம் எரிபொருள்
தொடர்ந்து கருத்துரைத்த அவர், "உலக சந்தையின் சாதாரண விலையை விட 35% குறைவாக ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை கொள்வனவு செய்ய முடியும்.
ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை இறக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகள் எரிபொருளை வாங்குகின்றன.
பதில் கூறாத அமைச்சு
எரிபொருளை கொள்வனவு செய்யும் வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தயார் என இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் எரிசக்தி அமைச்சிடம் தெரிவித்தார். ஆனால் அந்த கோரிக்கைக்கு அமைச்சு இதுவரை பதிலளிக்கவில்லை.
அமெரிக்காவை மையமாகக் கொண்ட சித்தாந்தம் காரணமாக ரஷ்யாவின் கோரிக்கையை இலங்கை புறக்கணித்துள்ளது.
நாம் ரஷ்யாவிடம் குறைந்த விலையில் எரிபொருளை கொள்வனவு செய்து இருக்கலாம். இருப்பினும், அமெரிக்காவுடன் நட்புறவைப் பேணுவதற்காக ரஷ்யா வழங்கிய நீண்ட கால கடன் வசதியை நாங்கள் புறக்கணித்துள்ளோம்" எனக் குறிப்பிட்டார்
