உலக நாடுகளிடம் மண்டியிடும் இலங்கை!! தரப்படுத்தலிலும் நெருக்கடி
கடன் தரப்படுத்தலில் இலங்கை தற்போது நெருக்கடியான கட்டத்தில் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) நேற்று (09) தெரிவித்தார்.
செய்தியாளர் சந்திப்பொன்றில் இதனைத் தெரிவித்த அவர், மோசமான நிதி முகாமைத்துவம் காரணமாக சலுகைக் கடனைப் பெற முடியாத நிலை இருப்பதாகவும் கூறினார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
''எதிர்வரும் இரண்டு மூன்று மாதங்கள் மிகவும் முக்கியமானது. எண்ணெய் மற்றும் அத்தியாவசிய மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வது கூட பாரிய நிச்சயமற்ற விடயமாக மாறியுள்ள நிலையில், நாடு துரதிஷ்டவசமாக அதளபாதாளத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.
இன்று அரசாங்கம் உலகம் முழுவதும் சென்று, நாடுகளின் முன் பணிந்து டொலர்களைக் கோருகிறது. ஆனால், டொலர் கையிருப்பு இல்லாததால் ஏற்பட்டுள்ள அவலத்தின் பாரதூரத்தை அரசாங்கம் இன்னும் உணரவில்லை.
ஒருபுறம் நாட்டில் மதவெறி, இனவெறி என இனவாதத்தை பரப்பும் அரசாங்கம் தேசபக்தி என்ற முத்திரையை காட்டி கட்டார், ஓமன் உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து டொலர்களை தேடுகிறது.
அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் தங்களது கைக்கூலிகளுக்கு வரிச் சலுகை வழங்கி பலப்படுத்தினாலும் அது நாட்டுக்கு பலத்த பின்னடைவைத் தான் கொடுத்துள்ளது.
அரசாங்கம் தனது பிரபலத்தை தக்கவைத்துக் கொள்வதற்காகவே அரசியலை முன்னெடுத்து வருகிறது. இந்த அரசாங்கத்தில் மக்களுக்கு உகந்த ஆட்சிக்கான சாயல் என்பது இல்லை'' என்றார்.