சுதந்திர தினம் என்ற ஒன்று இல்லை! ஜே.வி.பியினர் திட்டவட்டம்
சிறிலங்காவின் ஆட்சியாளர்கள் இனவாத மற்றும் மதவாத பிளவை ஏற்படுத்தி அரசியல் செய்வதாக மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது.
இவ்வாறாக நாளாந்தம் இனவாத மற்றும் மதவாத பிரச்சனைகளை எதிர்நோக்கும் இலங்கையில், சுதந்திரம் என்ற ஒன்று இல்லை என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்கு தெரிவித்துள்ளார்.
கொழும்பு காலிமுகத்திடலில் சுதந்திரத் தினக் கொண்டாட்டங்களை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையிலேயே, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இனவாத மற்றும் மதவாத பிளவு
இது குறித்து அவர் தெரிவித்ததாவது, பிரித்தானியர்களிடமிருந்து இலங்கை பொருளாதார சுதந்திரத்தை பெற்றுக் கொண்டாலும் முழுமையான அரசியல் - பொருளாதார சுதந்திரத்தை நாம் இன்னும் பெற்றுக் கொள்ளவில்லை.
இலங்கையில் தற்போது சுதந்திரம் என்ற ஒன்று இல்லை. நாம் கொண்டாடுவதற்கு எதுவும் இல்லை.
இனவாதம் மற்றும் மதவாதத்துடன் தொடர்புடைய நெருக்கடிகளை இலங்கை நாளாந்தம் எதிர்நோக்குகிறது. இந்த இனவாத மற்றும் மதவாத பிளவை ஏற்படுத்தியது எமது ஆட்சியாளர்கள்.
சுதந்திரமாக வாழக்கூடிய நிலை இங்கு இல்லை. இதனாலேயே, எதிர்கால சந்ததியினர் வெளிநாடுகளுக்கு குடிபெயர்கிறார்கள். இன்று கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள இளைஞர்கள் வரிசையில் காத்திருக்கிறார்கள்.
தேசிய ஒற்றுமை இல்லை
வடக்கு-கிழக்கு மாத்திரமின்றி இலங்கையில் உள்ள அனைத்து மக்களுக்கும் கொண்டாட சுதந்திரம் என்ற ஒன்று இல்லை. தேசிய ஒற்றுமை இல்லை.
இந்த நிலையில், நாளைய தினம் நடைபெறவுள்ள சுதந்திர தினக் கொண்டாட்டம், அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் வீண் செலவுகளின் வெளிப்பாடு.
இலங்கை மக்களுக்கு சுதந்திரமும் இல்லை பொருளாதார சுதந்திரமும் இல்லை. அத்துடன், இலங்கையில் நாளைய தினம் நடைபெறவுள்ள சுதந்திர தினக் கொண்டாங்களில் மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி பங்கேற்காது.
எமக்கு இந்த நிகழ்வில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும், சுதந்திரம் இல்லாத நாட்டில் மேற்கொள்ளப்படும் சுதந்திர தின கொண்டாட்டங்களில் நாம் பங்கேற்க மாட்டோம். எனக் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |