சர்வதேச நாணயநிதியத்தின் சீர்திருத்த பாதையில் பயணியுங்கள் : அமெரிக்க தூதுவர் வலியுறுத்தல்
பொருளாதார சீர்திருத்தங்கள் கடினமானவை ஆனால் இலங்கை சரியான பாதையில் பயணிக்கின்றது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலிசங் (Julie Chung) தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கை சர்வதேச நாணயநிதியத்தின் (IMF) சீர்திருத்த பாதையில் செல்லவேண்டியதன் அவசியத்தையும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் (Colombo) இன்று (15) இடம்பெற்ற அமெரிக்க - இலங்கை வர்த்தக பேரவையின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சமந்தா பவர் ஜனாதிபதியுடன் உரையாடல்
இங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ''எதிர்காலத்தை கட்டியெழுப்புவது இலகுவான விடயமல்ல. சர்வதேச நாணயநிதியத்தின் ஈஎவ்எவ் திட்டம் (EFF), பொருளாதார ஆட்சிமுறை சீர்திருத்தங்களையும் ஊழலிற்கு எதிரான போராட்ங்களையும் கோருகின்றது.
பொருளாதார சீர்திருத்தங்கள் கடினமானவை ஆனால் இலங்கை சரியான பாதையில் பயணிக்கின்றது. எனக்கு புதிய ஜனாதிபதி மற்றும் புதிய பிரதமரை சந்தித்து இந்த விடயங்கள் குறித்து உரையாடுவதற்கான சந்தர்ப்பம் சமீபத்தில் கிடைத்தது.
சிலநாட்களிற்கு முன்னர் யுஎஸ்எயிட்டின் (US AID) நிர்வாகி சமந்தா பவர் (Samantha Power) பொருளாதார சீர்திருத்தங்களின் அவசியம் குறித்தும் இலங்கையின் பொருளாதாரத்தின் முக்கிய பகுதியான சிறிய நடுத்தர தொழில்துறையினருக்கு நாம் எவ்வாறு உதவலாம் என்பது குறித்தும் உங்கள் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடினார்.
மாற்றத்திற்கான அழைப்பு
கடந்த மாதம் வாக்குபெட்டிகள் மூலம் இலங்கை மக்கள் மாற்றத்திற்கான அழைப்பை விடுத்ததை நாம் பார்த்தோம். அவர்கள் நாட்டின் எதிர்காலத்திற்கான தங்களுடைய எதிர்பார்ப்பை வெளியிட்டனர்.
இதனை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு நாட்டின் தலைவர்களிடம் உள்ளது. அரசாங்கத்தில் உள்ளவர்களிற்கு மாத்திரமல்லாமல் வர்த்தகம், கல்வி, ஊடகம் சிவில்சமூகத்தை சேர்ந்தவர்களிற்கும் இதற்கான பொறுப்புள்ளது.
அமெரிக்கா இலங்கை ஆகியவற்றின் வர்த்தகங்களிற்கு இடையிலான உறவு பலவருட பரஸ்பர நம்பிக்கை மற்றும் பகிரப்பட்ட மதிப்புகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க - இலங்கை வணிக உறவு
எனினும் இந்த உறவுகள் தொடர்ந்து செழிப்பதற்கு இலங்கை அரசாங்கம் எதிர்வுகூறக்கூடிய நிலையான நிர்வாக முறையை உருவாக்குவது அவசியம். கொள்கைகள் தெளிவானதாகவும் விதிமுறைகள் சீரானதாகவும் சூழலில் சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்படும் சூழலில் வணிகங்கள் செழித்து வளர்கின்றன.
ஒரு நிலையான நிர்வாக அமைப்பு அதிக முதலீட்டை ஈர்க்கும், அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும், பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும். அமெரிக்க - இலங்கை வணிக உறவுகளின் எதிர்காலம் குறித்து நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்.
சர்வதேச நாணய நிதியத்தின் சீர்திருத்தங்களின் பாதையில் செல்வதன் மூலம் ஊழலிற்கு எதிராக போராடுவதன் மூலம் அனைவரினதும் குரல்களும் செவிமடுக்கப்படும், அனைவரும் உள்ளடக்கப்படும் எதிர்வுகூறக்கூடிய நிர்வாக அமைப்பை கட்டியெழுப்புவதன் மூலம் எங்கள் பொருளாதார கூட்டாண்மையின் முழுமையான திறனை வளர்க்க முடியும்.” என தெரிவித்துள்ளார்.
Today I addressed members of the Sri Lanka-USA Business Council at their Annual General Meeting to renew our dedication to our shared goals, building stronger, inclusive communities and thriving local economies together. Our US-SL partnership is focused on increasing trade and… pic.twitter.com/4GhBQOtPjN
— Ambassador Julie Chung (@USAmbSL) October 15, 2024
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |